/indian-express-tamil/media/media_files/2025/10/10/pg-trb-and-ttv-2025-10-10-11-45-14.jpg)
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை ஒத்திவைப்பதோடு, புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப தேர்வர்கள் தயாரான பின்னர் தேர்வை நடத்த வேண்டும் என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1996 முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. இதற்கான தேர்வு அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்வு வாரியம் அறிவித்தது.
இந்தநிலையில், தேர்வுக்கான பாடத்திட்டத்தில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், தேர்வுக்கு தயாராக போதிய அவகாசம் வழங்கும் வகையில், தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்வை தள்ளிவைப்பது தொடர்பாக பரிசீலிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அறிவுறுத்தியிருந்தது.
ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்ட தேதியில் தேர்வை நடத்தும் முனைப்பில், தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை (ஹால்டிக்கெட்) வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை நடத்தி முடிப்பதில் அவசரம் காட்டுவது ஏன்? – புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப தேர்வர்கள் தயாராகும் வகையில் தேர்வைத் தள்ளிவைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முன்வர வேண்டும்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற தேர்வர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்க மறுத்து, அக்டோபர் 12 ஆம் தேதி திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் எனத் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்வர்கள் தொடர்ந்த வழக்கில் தேர்வுத் தேதியைத் தள்ளிவைப்பது தொடர்பாகப் பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், திட்டமிட்டபடி தேர்வை நடத்தியே தீருவோம் எனப் பிடிவாதம் பிடிக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள் தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டிருக்கும் நிலையில், தேர்வுக்கு தங்களை முழுமையாக தயார்ப்படுத்திக் கொள்ளும் வகையில் கூடுதல் கால அவகாசம் வழங்கிய பின்னர் தேர்வை நடத்த வேண்டும் எனத் தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே, தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற இருக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை ஒத்திவைப்பதோடு, புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப தேர்வர்கள் தயாரான பின்னர் தேர்வை நடத்த வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.