கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கோயம்புத்தூர் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் கல்விசார் குழு சார்பில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
மேலும் கடந்தாண்டில் 10 மற்றும் 12 ம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறக் காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பள்ளி முதல்வர்களுக்கு கேடயமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது, ''ஒவ்வொரு மனிதருக்கும் ஏணிப்படியாக ஒரு ஆசிரியர் இருப்பார். ஆசிரியர் இல்லை என்றால், அங்கீகாரமே கிடைக்காது. ஆசிரியர் பணி என்பது பணி அல்ல, அது ஒரு வாழ்வியல். அறிவுசாரந்த சமுதாயத்தின் அச்சாணி.
ஆசிரியர்கள் தங்களது பாதி வாழ்வை சமுதாயத்திற்காக தான் செலவு செய்கிறார்கள். பள்ளிக்கூடங்களுக்கு வெற்றுத்தாளாக வரும் மாணவர்களை, சமுதாயம் போற்றும் புத்தகமாக மாற்றுவது ஆசிரியர்கள் தான். ஆசிரியர் மாணவர் முன்பு நின்று பாடம் நடத்தும் உணர்வை வேறு எந்த டெக்னாலாஜியாலும் கொண்டு வர முடியாது.
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் பங்களிப்பும் முக்கியம். ஒன்றிய அரசே நம்மை பாராட்டுகிறது. பள்ளி இடைநிற்றல்கள் குறைவதற்கு தனியார் பள்ளிகளும் காரணம்.
பல்வேறு விதமான பின்னணிகளில் இருந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகிறார்கள். அப்படி வரும் எல்லா பிள்ளைகளும் அறிவாளியாக இருக்க முடியாது. நுழைவுத் தேர்வு வைத்து மாணவர்களை தேர்வு செய்யாமல், எல்லா பிள்ளைகளையும் ஏற்றுக் கொண்டு தயார் செய்கின்றோம் என தனியார் பள்ளிகள் சொல்ல வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என இருவரும் சேர்ந்து அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவோம்.” இவ்வாறு அமைச்சர் கூறினார்.
பி.ரஹ்மான், கோவை