அறிவித்த தேதியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு 56 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையும் படியுங்கள்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெற… தேசிய டிஜிட்டல் நூலகம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.,வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறுவார்கள் என எதிர்க்கட்சிகள் பேசுவதிலிருந்து அவர்களுக்கு தோல்வி பயம் இப்போதே தொடங்கிவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "அறிவித்த தேதியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள் நடைபெறும். செய்முறை தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக ஏதுவாக அந்தந்த பள்ளிகளுக்கு ஏற்ற வகையில் அந்த தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம். 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்பது தேர்தலைப் போன்றது. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளையொட்டி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி நிரவல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு 2 நாட்களில் தீர்வு காணப்படும்" எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், திருவெறும்பூர் முன்னாள் எம்எல்ஏ சேகரன், திருவெறும்பூர் ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, கங்காதரன், திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.