தெற்கு ரெயில்வேயின் பல்வேறு நிலைகளில் 964 பணியிடங்களில் 80 சதவீதத்தை வட இந்தியர்களுக்கு தாரை வார்ப்பதா? என கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழர்கள் குறைந்த அளவில் தேர்வு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தெற்கு ரெயில்வேயில் பல்வேறு நிலைகளில் 964 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில் 80 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்களை வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தேர்வாகி இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
இதையும் படியுங்கள்: UPSC Exam: நீங்க தவற விடக்கூடாத சில டாபிக்ஸ் இங்கே!
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வெளிமாநிலத்தவர்கள் திட்டமிட்டு திணிக்கப்படுகிறார்களோ? என்ற ஐயத்தை இது எழுப்பியிருக்கிறது.
ரெயில்வே துறை, ஐ.சி.எப்., எனப்படும் ரெயில் பெட்டித் தொழிற்சாலை ஆகியவற்றுக்கான கூட்ஸ் கார்டுகள், இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர், முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், முதுநிலை வணிகம் மற்றும் பயணச்சீட்டு எழுத்தர், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட ஐந்தாம் நிலை மற்றும் ஆறாம் நிலைப் பணிகளுக்கு சென்னையிலுள்ள ரெயில்வே பணியாளர் வாரியம் மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டன.
2020-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி முதல் 2022-ம் ஆண்டு டிசம்பர் 12 வரை நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் முடிந்த பிறகு 964 பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 200 பேர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. 750க்கும் மேற்பட்டவர்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்கள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் பெயர்களைத் தேடித்தேடி பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாறாக, பட்டியலில் பாண்டேக்கள், சவுத்திரிகள், சவுகான்கள், மீனாக்கள், பிஸ்வாஸ்கள், குமார்கள் தான் எங்கும் நிரம்பியிருக்கிறார்கள்.
தெற்கு ரெயில்வே துறை, ரெயில் பெட்டித் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுவையின் அனைத்து பகுதிகள், கேரளாவின் சில பகுதிகள், ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தின் ஓரிரு நகரங்கள் ஆகியவற்றில் தான் பணிகள் உள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவிலும், அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்த அளவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் அது நியாயமானதாக இருக்கும்.
ஆனால், 80% பணியிடங்களுக்கு வட இந்தியர்கள் உள்ளிட்ட வெளிமாநிலத்தவரே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை நியாயப்படுத்த முடியாது. இது இயற்கை நீதிக்கு முற்றிலும் எதிரானது. பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலைப் பார்க்கும் போது வட இந்திய விண்ணப்பதாரர்களுக்கு சாதகமாக முறைகேடுகள் நடந்திருக்குமா? என்ற அச்சம் எழுகிறது.
எடுத்துக் காட்டாக கூட்ஸ் கார்டு பணிக்கு வரிசை எண் 54 முதல் 67 வரை தொடர்ச்சியாக மீனாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இளநிலை கணக்கு உதவியாளர் பணியில் வரிசை எண் 70 முதல் 90 வரை தொடர்ச்சியாக 21 இடங்களை பிடித்திருப்பவர்கள் மீனாக்கள் தான்.
அதே பணிக்கு வரிசை எண் 149-163, 201-214 வரையிலான 29 இடங்களில் 28 இடங்களைக் கைப்பற்றியிருப்பவர்கள் குமார் என்ற குடும்பப் பெயர் கொண்ட வட இந்தியர்கள் ஆவர். எந்த பணிக்கும் தமிழர்கள் தொடர்ச்சியாக 4 பேர் கூட தேர்ந்தெடுக்கப் படாத நிலையில், வட இந்தியர்கள் மட்டும் கொத்துக் கொத்தாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு நியாயமான காரணங்கள் இல்லை. இதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா? என்பது பற்றி விசாரிக்கப்பட வேண்டும்.
ரெயில்வே துறையாக இருந்தாலும், வங்கிப் பணிகளாக இருந்தாலும், அஞ்சல் துறையாக இருந்தாலும், என்.எல்.சி நிறுவனமாக இருந்தாலும், பொதுத்துறை நிறுவனப் பணிகளின் வேலைவாய்ப்புகள் முழுக்க முழுக்க வட இந்தியர்களால் தான் கைப்பற்றப்படுகின்றன.
தேர்வு முறையும், தேர்வு மைய கண்காணிப்பு குற்றச்சாட்டும் இதற்கு சாதகமாக வடிவமைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. இவற்றைக் கடந்து தமிழக அரசுப் பணிகளிலும் வட இந்தியர்கள் நுழையத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு, பொதுத்துறை பணிகளில் 80 முதல் 90 விழுக்காட்டையும், தமிழக அரசு பணிகளில் சிலவற்றையும் வட இந்தியர்கள் பறித்துக் கொண்டால், தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவு கருகி விடும்.
அரசுப் பணிகள் இப்படி என்றால், தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு தான் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஓசூர் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் வட இந்திய பெண்கள் அதிக எண்ணிக்கையில் சேர்த்து விட்டு, தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுவது தான் இதற்கு எடுத்துக் காட்டு ஆகும்.
இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் அமைப்பு சார்ந்த வேலைகள் அனைத்தும் வட இந்தியர்கள் வசமாகி விடும் ஆபத்து இருக்கிறது. அது நடந்தால் தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் அடிமைகளாக வாழும் நிலை உருவாகும். அத்தகைய நிலையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
மேலும், பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போலவே தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள இடைநிலை மற்றும் கடைநிலைப் பணிகள் அனைத்தும் முழுக்க முழுக்க உள்ளூர் மக்களைக் கொண்டே நிரப்பப்படும் வகையில் 100% மாநில ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மத்திய அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் பணியிடங்களில் 50% மாநில ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதைப் போன்று, பிற தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகளிலும் தமிழ் பாடத் தாள் கட்டாயமாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தனியார் பெரு நிறுவனங்களின் அமைப்பு சார்ந்த பணிகளில் 80 விழுக்காட்டை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கி சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.