/tamil-ie/media/media_files/uploads/2020/02/image-2020-02-13T112610.774.jpg)
‘டான்செட் (TANCET)’ நுழைவு தேர்வு எழுதிய பட்டதாரிகள் எம்.பி.ஏ (MBA), எம்.சி.ஏ (MCA) படிப்பில் சேர ஆன்லைன் வழியாக ஜூன் 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளின் இடங்களுக்கும், தனியார் சுயநிதி கல்லூரிகளிடம் இருந்து சரண் செய்யப்படும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளின் இடங்களுக்கும் நடப்பு 2025-26 ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாணவர் சேர்க்கை பணிகளை கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி (GCT) மேற்கொள்கிறது. ‘டான்செட்’ நுழைவு தேர்வு எழுதிய மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 30 ஆம் தேதி ஆகும். விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் ஜூலை 14 ஆம் தேதி வெளியிடப்படும்.
எம்.பி.ஏ, எம்.சி.ஏ ஆகிய 2 படிப்புகளுக்கும் சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு ஜூலை 21 ஆம் தேதி கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறும். அதை தொடர்ந்து, எம்.சி.ஏ படிப்புக்கான பொது கலந்தாய்வு ஜூலை 24 முதல் 26 ஆம் தேதி வரையும், எம்.பி.ஏ படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரையும் இணைய வழியில் நடைபெறும். அதன்பிறகு, துணைக் கலந்தாய்வு எம்.சி.ஏ படிப்புக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதியும், எம்.பி.ஏ படிப்புக்கு ஆகஸ்ட் 6 ஆம் தேதியும் நடத்தப்படும்.
மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை https://www.tn-mbamca.com என்ற இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9790279020 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.