சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாக மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கிண்டி பொறியிற் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளுக்கு பிப்ரவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை அரியர் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, இறுதி ஆண்டு பருவத் தேர்வு தவிர, பல்கலைக்கழகங்கள், கலை, அறிவியல் கல்லூரிகளின் அரியர்ஸ் தேர்வுகள், தொழில்நுட்பக் கல்லூரிகளின் அரியர்ஸ் தேர்வுகளை முதல்வர் பழனிசாமி முன்னதாக ரத்து செய்தார். மேலும், அரியர்ஸ் தேர்வு எழுத தேர்வுக் கட்டணம் செலுத்திய அனைத்து அரியர்ஸ் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.
அரியர் தேர்வுகளை நடத்தாமல் முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தியன் தொடர்ந்த வழக்கில் பதிலளித்த பல்கலைக்கழக மானியக்குழு அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது.
வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை நான்கு வாரங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்ட அரியர் தேர்வுக்கான கால அட்டவணையை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது