மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 11 பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரத்தை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 400-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டு 440 பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகளுக்கு மீண்டும் மவுசு அதிகரித்துள்ளது. குறிப்பாக சமீபத்திய தொழில்நுட்ப வளர்ச்சியால் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் போன்ற படிப்புகளை மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வு செய்து வருகின்றனர். இதன் காரணமாக 2023-24 ஆம் ஆண்டு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை சற்று அதிகரித்தது. இருப்பினும், சில கல்லூரிகளில் சேர்க்கை ஒற்றை இலக்கத்தில்தான் அமைந்தது.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 11 கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரத்தை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
”கடந்த 4 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள 11 பொறியியல் கல்லூரிகளுக்கு 2024-25 ஆம் ஆண்டு கல்வியாண்டில் இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படாது. 2023-24 ஆம் ஆண்டு கல்வியாண்டில் 25 சதவீதத்துக்கு குறைவான சேர்க்கை கொண்ட 67 கல்லூரிகளுக்கு வரும் கல்வியாண்டில் இணைப்பு அங்கீகாரம் நிபந்தனையுடன் அளிக்கப்படும். இதை பின்பற்றாத கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்” என்று அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“