தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க வேண்டும். தேர்வுகளும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும், பல கல்லூரிகள் தங்கள் ஆசிரியர்களை கல்லூரியில் இருந்து ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுக்கச் சொல்வதா அல்லது அவர்களின் வீடுகளிலிருந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க அனுமதிக்கலாமா என்று குழப்பத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் திங்கள்கிழமை அன்று, தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளின் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, ஏப்ரல் 20ஆம் தேதி முதல் தங்களது வீட்டிலிருந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில், அண்ணா பல்கலைக்கழகம், அதன் மண்டல வளாகங்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி பெறாத கல்லூரிகளின் வகுப்புகளை ஏப்ரல் 20ஆம் தேதி முதல் ஆன்லைன் முறையில் ஆசிரியர்கள் அவர்களின் வீடுகளிலிருந்தே நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த ஆன்லைன் வகுப்புகள் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நடைபெறும். இந்த நடைமுறை, இது தொடர்பான அடுத்த உத்தரவு வரும் வரை தொடரும் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எல் கருணமூர்த்தி ஒரு சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil