தமிழகத்தில் இயங்கிவரும் இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் 92 இஞ்ஜினியரிங் கல்லூரிகள் தரமற்றவை என்று அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
போதிய ஆசிரியர்கள் இல்லாமை மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத 92 இஞ்ஜினியரிங் கல்லூரிகள் மீது மாணவர் சேர்க்கை குறைப்பு, அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான கல்லூரிகளில் அண்ணா பல்கலைகழகம் தரப்பிலான கண்காணிப்பு குழு சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இந்த கண்காணிப்பு குழுவில், ஐஐடி மெட்ராஸ், இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் சயின்ஸ் ( பெங்களூரு) மற்றும் என்ஐடி திருச்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், அண்ணா பல்கலைகழக பேராசிரியர்களுடன் இணைந்து 537 கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டன. இதில் 250 கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாததால், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
92 கல்லூரிகள் தரமற்றவை என்றும் அந்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ள அண்ணா பல்கலைகழகம், அந்த 92 கல்லூரிகளின் பட்டியலை வெளியிட மறுத்துவிட்டது.
மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும், ஒவ்வொரு கல்லூரியாக ஆராயமுடியாது என்றும், அந்த தரமற்ற என்று வகைப்படுத்தப்பட்டுள்ள 92 கல்லூரிகளின் பட்டியலை உடனே வெளியிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பேராசிரியர்களும், கல்வி நிபுணர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.