அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு, புகழ்பெற்ற நிறுவனம் என்ற புதிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.இதன்காரணமாக, இணைப்பு கல்லூரிகளை அங்கீகரிக்கும் அதிகாரத்தை விரைவில் இழக்க உள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட தனியார் இஞ்ஜினியரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இஞ்ஜினியரிங் கல்லூரிகளுக்கான இணைப்பு அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி வந்தது.
2018-19ம் கல்வியாண்டு வரையிலான மாணவர் சேர்க்கையையும் அண்ணா பல்கலைக்கழகமே நடத்தி வந்தது. அதனைத் தொடர்ந்து 2019-20ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கையை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தியது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புகழ்பெற்ற நிறுவனம் என்ற அந்தஸ்தை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புகழ்பெற்ற நிறுவனம் என்ற அந்தஸ்து கிடைத்ததும், அது தனி நிறுவனமாக செயல்பட தொடங்கிவிடும். இதனால் அதன் கீழ் உள்ள இணைப்பு கல்லூரிகளை அங்கீகரிக்கும் அதிகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் இழக்கும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இணைப்பு கல்லூரிகளை அங்கீகரிக்க புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அவசியமாகிறது. அதுதொடர்பான முடிவுகள் அரசின் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த புதிய பல்கலைக்கழகத்தில் பிரத்யேக இணைப்பு மையம், பதிவாளர் மற்றும் தேர்வுகள் கட்டுப்பாட்டு அலுவலருக்கு தனி அலுவலகமும் செயல்படும். இதற்கான நடவடிக்கைகளை உயர்கல்வி துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சென்னை அல்லது சென்னை, திருச்சி, சேலம் என்று 3 இடங்களில் கொண்டுவர அரசு திட்டமிட்டு வருவதாக தொழில்நுட்ப கல்வி இயக்கக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.