தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் நடத்துவது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பாரதியார், பாரதிதாசன், பெரியார் போன்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் பருவத் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அனைத்து தேர்வுகளும் மே 25 முதல் நடத்தப்படவுள்ளது. தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் 3 மணி நேரம் நடைபெறும்.
பிப்ரவரி மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கு பதில் மறுதேர்வு நடத்தப்படும். பிப்ரவரியில் நடைபெற்ற நவம்பர் மற்றும் டிசம்பர் 2020க்கான பருவத்தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக மாணவர்கள் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தனர். அந்த புகார் எதிரொலியாக பிப்ரவரி 2021 ல் நடைபெற்ற தேர்வுகளுக்கு பதில் மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.
பிப்ரவரி 2021ல் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதை கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாகவும், ஏற்கனவே பிப்ரவரி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பினால் மீண்டும் தேர்வு எழுதலாம் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பருவத் தேர்வுகளுக்கு மாணவர்கள் மீண்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை. மாணவர்கள் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உள்ளார்களோ அதுவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆன்லைன் தேர்வுகள் நடத்துவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதற்கு முன்னர் பிப்ரவரியில் நடைபெற்ற தேர்வில் சுமார் 4.25 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 1.10 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர், எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil