அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் பொறியியல் படித்த மாணவர்கள், நீண்ட காலமாக அரியர் வைத்திருந்தால், இப்போது சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் தொலைநிலைக் கல்வி மூலம் பொறியியல் படித்த மாணவர்களில் பலர் இன்னும் அரியர் வைத்துள்ளனர். இந்தநிலையில், நீண்ட காலமாக அரியர் வைத்துள்ளவர்களுக்கு சிறப்பு தேர்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட கால உச்ச வரம்பைக் கடந்து நீண்டகாலமாக அரியர் பாடங்கள் வைத்திருப்பவர்கள், 2025 ஏப்ரல்-மே மற்றும் ஜூன்-ஜூலை மாதங்களில் நடைபெறும் சிறப்புத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த தேர்வுக்கு மாணவர்கள் http://coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் மே 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு கட்டணமாக ரூ. 5000 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை பொருத்து தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்படும். மேலும், தேர்வு நடைபெறும் இடங்கள் மற்றும் கால அட்டவணை குறித்த விவரங்கள் மே 27 ஆம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இதுவே இறுதி வாய்ப்பு என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
நீண்ட காலமாக அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, தங்களுடைய பட்டத்தைப் பெற தேவையான கடைசி முயற்சியாக இந்த தேர்வை எழுதலாம்.