சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று (நவ.17) அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுக் கட்டணம் 50% உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
அதன்படி இளநிலைப் படிப்பில் ஒரு தாளுக்கான கட்டணம் ரூ.150 ஆக இருந்த நிலையில் ரூ.225ஆக அதிகரித்தது. அதே போல் இறுதியாண்டு மாணவர்கள் ப்ராஜெக்ட் கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆக உயர்த்தப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. மாணவர்கள் ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதால் கூடுதலாக கிட்டதட்ட ரூ.1000 செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், மாணவர்களும், பல கல்லூரி நிர்வாகமும் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து இன்று (நவ.18) அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். முன்னதாக, உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் இந்த செமஸ்டருக்கு பொருந்தாது என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய துணை வேந்தர் வேல்ராஜ் கூறுகையில், "நடப்பாண்டு செமஸ்டர் தேர்வுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும். மீண்டும் சிண்டிகேட் கூடி முடிவெடுக்கும் வரை தற்போதைய நிலையே நீடிக்கும். அடுத்த அறிவிப்பு வரும் வரை பழைய கட்டணமே வசூலிக்கப்படும்.
விரைவில் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான தேர்வுக் கட்டணம் விதிக்க ஆலோசனை நடத்தப்படும். இதுதொடர்பாக அனைத்து பல்கலை துணை வேந்தர்களுடன் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். ஒரே மாதிரியான கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.
உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்திய மாணவர்களுக்கு கூடுதல் கட்டணம் திருப்பி தரப்படும். 10 வருடத்திற்கு பிறகு தேர்வுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. எனினும் உயர் கல்வித்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் படி உயர்த்தப்பட்ட 50% தேர்வுக் கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“