சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் இந்த கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பம் செய்வர்.
தற்போது மாணவர்களுக்கு இந்தாண்டிற்கான செமஸ்டர் தேர்வு வர உள்ளது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுக் கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளது. இளநிலைப் படிப்பில் ஒரு தாளுக்கான கட்டணம் ரூ.150 ஆக இருந்த நிலையில் தற்போது 50% உயர்ந்து ரூ.225ஆக உள்ளது.
மாணவர்கள் ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதால் மொத்தம் ரூ.2050 தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
முதுநிலை படிப்பை பொறுத்தவரை ஒரு தாளுக்கான தேர்வு கட்டணம் ரூ.450-ல் இருந்து ரூ.650 ஆக உயர்ந்துள்ளது. இளநிலை படிப்பிற்கான இறுதியாண்டு மாணவர்கள் ப்ராஜெக்ட் கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.600 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது. அதேபோல் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான ப்ராஜெக்ட் கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.900ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 4 ஆண்டு படிப்பை முடித்த பிறகு பெறப்படும் டிகிரி சான்றிதழுக்கான கட்டணம் ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு அடுத்த செமஸ்டர் முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 50% தேர்வுக் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“