அண்ணா பல்கலைக்கழகம், பி.இ, பி.டெக் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு வரும் டிசம்பரில் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்த வேண்டும் என்றும் செய்முறை தேர்வுகளும் நேரடியாக நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக் கழகம் பி.இ, பி.டெக் படிப்புகளுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்பிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு செமஸ்டர் தேர்வு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்ததையடுத்து, அண்ணா பல்கலைக்கழகம் பி.இ, பி.டெக் படிப்புகளுக்கு தேர்வுகளை நேரடியாக நடத்துவதாக அறிவித்துள்ளது. பி.இ, பி.டெக் படிப்புகளுக்கு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. அதனால், அனைத்து பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ரவிக்குமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்று அண்ணா பல்கலைக்கழக பாடத் திட்டத்தின் கீழ் பி.இ, பி.டெக், பி.ஆர்க், எம்.ஆர்க், எம்.பிளான் பட்டப்படிப்புகளை படித்து வரும் மாணவர்களுக்கு செப்டம்பர், டிசம்பர் மாதத்திற்கான பருவத் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், இறுதியாண்டு பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் டிசம்பர் மூன்றாவது வாரத்தில் நேரடியாக தேர்வு நடத்தப்படும். அனைத்து பொறியியல் கல்லூரிகளும் பருவத்தேர்வை நேரடி முறையில் மட்டுமே நடத்த வேண்டும் என்று அறிவித்துள்ளார். அதே போல, அனைத்து செய்முறை தேர்வுகளையும் நேரடியாக நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் நடப்பு கல்வியாண்டு முதலே பொறியியல் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. மற்ற ஆண்டுகளில் பயிலும் பொறியியல் மாணவர்களுக்கு படிப்படியாக பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக, பொறியியல் படிப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளுக்கான மதிப்பெண் விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"