ராகிங்கில் ஈடுபடமாட்டேன் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் ராகிங்கில் ஈடுபடமாட்டேன் என்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் ஒரு முக்கியமான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று தமிழக அரசு, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும் அனைத்து வகை கல்லூரிகளிலும் நடைபெற்று வந்த சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்தது. மேலும், ஜனவரி 3ம் தேதி முதல் பள்ள் - கல்லூரிகளில் வகுப்புகள் தினசரி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான், அண்ணா பல்கலைக்கழகம், ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என்று மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் உறுதிமொழி கேட்டு பிரமாணப் பத்திரம் கேட்டு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் ராகிங்கில் தடுக்கும் நோக்கத்துடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அனைத்து வகை மாணவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையில், மாணவர்கள் யாரும் ராகிங்கில் ஈடுபடமாட்டேன் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவளர்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், ஆண்ட்டி ராகிங் இணையதளத்திலும் (www.antiragging.in) மேன் முவ்மெண்ட் என்ற (www.amanmovement.org) இணையதளத்தில் பிரமாணப் பத்திரத்தை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் பாதுகாவலர்களும் இந்த உறுதிமொழி பத்திரத்தை பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும். இதை மீறும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்லூரிகளில் கடந்த காலங்களில் ராகிங் சம்பவங்கள் நடந்துள்ளதால் அது போல ராகிங் எதுவும் நடக்கக் கூடாது என்ற நோக்கத்தில் அண்ணா பல்கலைக்கழகம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இந்த சுற்றறிக்கை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் விரைவில் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் ராகிங்கில் ஈடுபடமாட்டேன் என்று பிரமாணப்பத்திரம் கேட்டு சுற்றறிக்கை அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”