பொறியியல் படிக்கும் மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற, அவர்களின் திறன்களை மேம்படுத்த நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு புதிய கோர்ஸ்கள் கற்பிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர். வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிக்கும் மாணவர்களை, தனியார் நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வு செய்வது மிகவும் குறைந்துவிட்ட, சூழ்நிலையில், பொறியியல் படிக்கும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த அண்ணா பல்கலைக்கழக நடவடிக்கை எடுத்துள்ளது.
பொறியியல் படிக்கும் மாணவர்கள், வேலை வாய்ப்புக்காக தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்வதற்காக பொறியியல் பட்டப் படிப்பு உடன் தொழில் சான்றிதழ் படிப்பு (Industry certification) தனியாக படித்து வந்தனர். ஐ.டி நிறுவனங்களும் மாணவர்களிடம் பொறியிடல் பட்டப்படிப்பு உடன் தொழில் சான்றிதழ் படிப்பையும் எதிர்பார்க்கின்றன.
இந்நிலையில், மாணவர்களின் திறமையை வளர்ப்பதற்காக, அண்ணா பல்கலைக்கழகம், புத்தம் புது படிப்புகளை (course) அறிமுகப்படுத்த உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 320-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இந்த கோர்ஸ்கள் அறிமுகமாக உள்ளது.
அதன்படி, கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல், சிவில் இன்ஜினியரிங், எலக்டிரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் உள்ளிட்ட படிப்புகளை தேர்வு செய்துள்ள மாணவர்களுக்கு, மூன்றாம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் Artificial Intelligence (AI), Internet of Things (IOT), Machine Learning (ML) ஆகிய கோர்ஸ்கள் கொண்டு வரப்படுகிறது. இந்த கோர்ஸ்களை பொறியியல் மாணவர்கள் ஆறாவது, ஏழாவது செமஸ்டரில் கட்டாயம் படிக்க வேண்டும்.
இதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அது சம்பந்தப்பட்ட பொறியியல் படிப்புகளை தேர்வு செய்துள்ள மாணவர்கள் Data Science, Full Stack Development, cloud computing, Cyber Security, AI and ML ஆகிய படிப்புகளில் ஏதாவது இரண்டு கோர்ஸ்களை கட்டாயம் தேர்வு செய்து படிக்க வேண்டும். இந்த கோர்ஸ்களை தொழில் நிபுணர்கள் மூலம் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் கற்பிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர். வேல்ராஜ் தெரிவித்தார். மேலும், இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு படிக்கும் போதே தொழில் திறன் வளர்ந்துவிடும் என்பதால் எளிதாக அவர்களுக்கு ஐடி துறையில் வேலை கிடைக்கும் என்றும் அவர் கூறினார். இந்த படிப்புகளை அடுத்த செமஸ்டர் முதல் அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தும் என வேல்ராஜ் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“