முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு, புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டம் தொழில்துறை நிபுணர்கள் மற்றும் கல்வி நிபுணர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் பாடத்திட்டமே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாடத்திட்டம் திருத்தப்பட்டபோது, 80% கல்வியாளர்கள் மற்றும் 20% தொழில்துறை நிபுணர்களை உள்ளடக்கிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை, புதிய பாடத்திட்டத்தில் 80% தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் 20% கல்வியாளர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டு பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது, என்று உயர்கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
பாடத்திட்டம் குறித்த கூட்டங்களின் போது, முதல் ஆண்டு பாடத்திட்டம் அதிகமாக உள்ளதாகவும் மற்றும் மாணவர்களின் சுமை குறைக்கப்பட வேண்டும் என்றும், கூட்டத்தில் கலந்துக் கொண்ட பலர் கூறினர். இந்த பாடத்திட்டத்தில் மெய்நிகர் ஆய்வகங்கள் என்ற கருத்தும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், பாடத்திட்டக் குழு பாடத்திட்டத்தை தொடர்ந்து திருத்துவதை உறுதி செய்யும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
எவ்வாறாயினும், ஒரு சில துறைகளில் கல்லூரிகள் திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை வடிவமைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அந்த அதிகாரி, பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்பு 10 வார கோடைக்கால வேலைவாய்ப்பு (Summer Internship) கட்டாயமாக்கப்பட்டுள்ளது, என்றும் கூறினார்.
தற்போது புதிய பாடத்திட்டம் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்றும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறைக்கான புதிய பாடத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும், என்றும் பல்கலைக்கழக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil