தேர்வு முடிவுகள்: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு
anna university semester exam : செமஸ்டர் தேர்வு கட்டணங்கள் கட்டிய, கட்டாத அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட வேண்டும்
செமஸ்டர் தேர்வு கட்டணங்கள் கட்டிய, கட்டாத அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.
Advertisment
அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் இயங்கும் கல்லூரி படிக்கும் மாணவர்கள் இருவர் தொடர்ந்த இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.
முன்னதாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில் இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகளைத் தவிர்த்து, மற்ற கல்வியாண்டு மாணவர்களின் ஏப்ரல் – மே பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட மதிப்பெண் வழங்கும் நடைமுறையையின் கீழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இருப்பினும், பருவத்தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது. நடத்தப்படாத தேர்வுக் கட்டணம் செலுத்த நிர்பந்திப்பது சட்ட விரோதமான செயல், கொரோனா பெருந்தொற்று போன்ற ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் ஏழை மாணவர்கள் தேர்வுக் கட்டணத்தை செலுத்த முடியாத சூழலில் உள்ளனர். எனவே, அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் கூறப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் நா்மதா சம்பத், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ் , செமஸ்டர் தேர்வு கட்டணங்கள் கட்டிய, கட்டாத அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் செப்டம்பா் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil