மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறை தான் நிதியளிக்கும் படிப்புகளில், மத்திய இடஒதுக்கீடு கொள்கையை மாநில அரசு பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டும் என்று எதன் அடிப்படையில் நிர்பந்திக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்த மனுக்களை விசாரித்த நீதிபதி புகழேந்தி, அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விஷயத்தில் மத்திய அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தினார்.
மேலும், இந்த வழக்கில் பல்கலைக்கழக மானியக்குழுவை எதிர்மனுதாரராக இணைத்து உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
அந்தந்த மாநில அரசுகளின் இடஓதுக்கீடு கொள்கையை பல்கலைக்கழகங்கள் பின்பற்ற பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) வழிகாட்டுதல்கள் அனுமதிப்பதால் உயர் நீதிமன்றம் இந்த கேள்வியை முன்னெடுத்தது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., பயோ டெக்னாலஜி, எம்.டெக், கம்ப்யுடேசனல் டெக்னாலஜி ஆகிய இரு படிப்புகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை உதவியுடன் நடத்தப்பட்டு வந்தன. இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடிப்பதா அல்லது மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடிப்பதா என்பது தொடர்பான சர்ச்சை எழுந்ததை அடுத்து இந்த இரு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதிகள், “அனைத்து பல்கலைக்கழகங்களும் புதிய படிப்புகளைத் தொடங்குகையில், அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் 25 ஆண்டுகளாக கற்பிக்கப்பட்டு வந்த படிப்புகளை நிறுத்துவதாக தோன்றுகிறது” என்று கருத்து தெரிவித்தார்.
இடஒதுக்கீடு குறித்து 25 ஆண்டுகளாக இல்லாத குழப்பம் இந்த ஆண்டு ஏற்பட்டது ஏன்? இடஒதுக்கீடு கொள்கையை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று மாநில அரசிடம் தற்போது பல்கலைக்கழகம் கேட்க வேண்டிய அவசியம் என்ன என்றும் நீதிபதி புகழேந்தி ஆச்சரியப்பட்டார்.
இந்த ஆண்டு முதல் இரு படிப்புகளுக்கு மத்திய அரசின் இடஒதுக்கீடு கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று உயிரித் தொழில்நுட்பத் துறையிடம் இருந்து தெரிவிக்கப்பட்டதாக பல்கலைக்கழகம் சார்பாக ஆஜாரான வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கே.எஸ். திருச்செங்கோடு ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட உயரக் கல்வி நிறுவனங்களில் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை உதவியுடன் நடத்தப்படும் படிப்புகளில் இந்த ஆண்டு முதல் மத்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றி மாணவர்களை அனுமதித்தனர் என்று மத்திய அரசு சார்பாக ஆஜாரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
மத்திய அரசு மறைமுகமாக இடஒதுக்கீடு கொள்கையை திணிக்கிறதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி புகழேந்தி, அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விஷயத்தில் மத்திய அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil