விவசாயிகளுக்கு ட்ரோன்களை இயக்குவது தொடர்பான பயிற்சியை அண்ணா பல்கலைக்கழகம் வழங்குகிறது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 400 விவசாயிகளுக்கு அடுத்த சில மாதங்களில் ஆளில்லா விமானங்கள் எனப்படும் ட்ரோன்களை எவ்வாறு பறக்கச் செய்வது, பராமரிப்பது மற்றும் பழுதுபார்ப்பது என்பதை அண்ணா பல்கலைக்கழகம் கற்றுக்கொடுக்க உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் நான்கு வளாகங்களில் ஒன்றான குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் உள்ள ஏரோஸ்பேஸ் ரிசர்ச் ரிமோட் பைலட் பயிற்சி நிறுவனத்தில் இந்த இரண்டு வார பயிற்சி நடைபெறும்.
இதையும் படியுங்கள்: நிதி, தொழில்நுட்பம், ஊடகம்… இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் வேலை வாய்ப்புகள் இவைதான்!
வயல்களில் பூச்சிக்கொல்லி, கரிம உரங்கள் தெளிக்க ட்ரோன்களை பயன்படுத்தப்படுவதற்கு பயிற்சி அளிக்கப்படும். இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு (IFFCO) நிறுவனம் சான்றளிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ட்ரோன், மூன்று சக்கர வாகனம் மற்றும் பிற உபகரணங்களை இலவசமாக வழங்கும்.
”விவசாயத்தில் பயன்படுத்த 2,500 ட்ரோன்களை வாங்க இஃப்கோ ஆர்டர் செய்துள்ளது. இன்றுவரை உலகின் மிகப்பெரிய ட்ரோன் கொள்முதல்களில் ஒன்றாக உள்ளது. விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழில்முனைவோருக்கு இந்த ட்ரோன்களை இலவசமாக வழங்குவோம். சிறிய, நடுத்தர வகை ஆளில்லா விமானங்களை விவசாயத்தில் சேர்ப்பது முக்கியம், ஏனெனில் இது உரமிடுதலில் சிறந்த பலனைத் தரும்,” என புது தில்லியின் இஃப்கோவின் தலைமை மேலாளர் (மார்க்கெட்டிங்) ரஜ்னீஷ் பாண்டே பயிற்சித் திட்டத்தின் தொடக்கத்தின் போது கூறினார்.
"ட்ரோன்கள் மூலம் உரம் தெளிப்பதற்கு ஒரு ஏக்கருக்கு 600 முதல் 700 வரை செலவாகும். இதனை ஒரு ஏக்கருக்கு 300 செலவாகும் பவர் ஸ்ப்ரேயர்கள் போன்ற மற்ற தெளிப்பான் முறைகள் அளவிற்கு கொண்டு வர IFFCO விரும்புகிறது. அதனால்தான் கிராமப்புற தொழில்முனைவோருக்கு இலவசமாக வழங்குகிறோம். விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் நிலை மேம்படும், அதிக விவசாய விளைபொருட்களைக் கொடுப்பது மற்றும் மாசுபாட்டைக் குறைக்கும்” என்றும் அவர் கூறினார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் திங்கள்கிழமை பயிற்சித் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், “விவசாய விளைபொருட்களை உடனடியாக சந்தைகளுக்குக் கொண்டு செல்ல ஆளில்லா விமானங்களை பயன்படுத்தலாம்” என்று கூறினார்.
மேலும், “வெள்ளத்தின் போது பயிர் சேதத்திற்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படலாம். வரும் ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் ட்ரோன் பைலட்டுகள் தேவைப்படலாம். ஆனால், நாங்கள் 5,000 ட்ரோன் பைலட்டுகளுக்கு மட்டுமே பயிற்சி அளித்துள்ளோம். ட்ரோன் பைலட் பயிற்சி மையங்கள் பல்வேறு இடங்களில் நிறுவப்படும்” என்றும் அவர் கூறினார்.
டி.ஜி.சி.ஏ இயக்க இயக்குநர் எஸ்.துரைராஜ் கூறுகையில், ”பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் 18 முதல் 65 வயதுக்குட்பட்ட எவரும் ஆளில்லா விமானங்களை பறக்க பைலட் சான்றிதழ்களைப் பெறலாம்,” என்று கூறினார்.
விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பேராசிரியர் கே.செந்தில் குமார் கூறுகையில், “விவசாயிகளுக்கு 50 மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் அவர்களது கற்றலை சோதிக்க வயல்கள் சோதனை நடத்தப்படும்” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.