செமஸ்டர் வினாத்தாள் முறை மாற்றம்: 15 மதிப்பெண் கேள்விகளை நீக்கிய அண்ணா பல்கலை.!
Anna University Question paper New pattern : 80 % கேள்விகளுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கும் வகையில் வினாத்தாள் முறைகளை அண்ணா பல்கலைக்கழகம் திருத்தி அமைத்துள்ளது.
கொரோனா பொது முடக்கநிலையால் இந்தியாவில் உயர்க் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், பாடத் திட்ட வகுப்புகள் முழுமையாக முடிக்கப்படாத சூழல் ஏற்பட்டுள்ளது. இறுதி ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் மேற்கொள்ள அண்ணா பல்கலைக்கழகம் தீவிரம் காட்டி வருகிறது.
Advertisment
இந்நிலையில், நடக்கவிருக்கும் செமஸ்டர் தேர்வுகளின் வினாத்தாள்களில் முக்கிய மாற்றங்கள் செய்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், கொரோனா ஊரடங்கால் 20% பாடத்திட்டங்கள் முடிக்கப்படவில்லை. அதாவது, மொத்தம் உள்ள ஐந்து பகுதிகளில், நான்கு பகுதிகள் மட்டும் முடிக்கப்பட்டுள்ளன அதனால், வினாத்தாளில் 80 சதவீத கேள்விகள் இந்த நான்கு பகுதிகளில் இருந்து மட்டும் கேட்கப்படும். இந்த 80 % கேள்விகளுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கும் வகையில் வினாத்தாள் முறைகள் மாற்றியமைக்கப்படும் " என்று தெரிவித்தது.
திருத்தியமைக்கப்பட்ட வினாத்தாள் முறையில், பகுதி III-ல் இருக்கும் 15 மதிப்பெண் கேள்விகளை அண்ணா பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது. அதற்குப் பதிலாக பகுதி I-ல் மூன்று மதிப்பெண்கள் கொண்ட 10 கேள்விகள் கேட்கப்படும். பகுதி II-ல் 19 மதிப்பெண்கள் கொண்ட 5 கேள்விகள் கேட்கப்படும்.
பகுதி I- ல் ஏதேனும் 8 (24 பதிபெங்கள் ) கேள்விகளுக்கு மாணவர்கள் பதிலளிக்க வேண்டும். பகுதி II- ல் ஏதேனும் 4 ( 76 மதிப்பெண்கள்) கேள்விகளுக்கு மாணவர்கள் பதிலளிக்க வேண்டும்.
இருப்பினும், நடப்பாண்டில் அரியர் (நிலுவைத்) தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு ஏற்கனவே உள்ள வினாத்தாள் நடைமுறை பின்பற்றப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது. ஏனெனில், ஏற்கனவே, அவர்களுக்கு பாடத்திட்டங்கள் முடிக்கப்பட்டு விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil