பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பொறியியல் அல்லாத ஆசிரியர்களுக்கு தளர்வு அளிக்கும் வகையில், மார்ச் 1, 2019 அன்று அல்லது அதற்கு முன் இணைந்த அறிவியல் மற்றும் மனிதநேய பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு NET அல்லது SLET அல்லது PhD கட்டாயமில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் அல்லாத ஆசிரியர்களுக்கு கட்டாய NET, SLET, PhD தகுதிகளை அறிமுகப்படுத்தியது. இது இந்த தகுதிகள் இல்லாமல் இருக்கும் ஆசிரியர்களை பாதித்தது. இதனால் பொறியியல் கல்லூரிகள், ஆசிரியர்களை முந்தைய விதிமுறைகளின்படி பணி நியமனம் செய்யப்பட்டதாகக் கூறி தளர்வு கோரின.
இதையும் படியுங்கள்: JEE முதன்மைத் தேர்வு; 250+ எடுக்க இந்த பாடத் தலைப்புகளை படிப்பது முக்கியம்!
இந்தநிலையில், 2023-24ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு நடத்துவதை முன்னிட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் மனிதநேயப் பேராசிரியர்களுக்கான விதிமுறைகளை தெளிவுபடுத்தும் சுற்றறிக்கையை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு மையம் வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ”மார்ச் 1, 2019 க்கு முன் அல்லது அதற்கு முன் சேர்ந்த NET அல்லது SLET அல்லது PhD இல்லாத தற்போதைய அறிவியல் மற்றும் மனிதநேய ஆசிரியர்கள் அதே கல்லூரியில் தொடர அனுமதிக்கப்படலாம். மார்ச் 1, 2019 அன்று அல்லது அதற்குப் பிறகு அதே பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பிற இணைப்புக் கல்லூரிகளுக்கு பதவி உயர்வுகள் அல்லது பணி மாறுதலாகி சென்ற ஆசிரியர்களும் மேற்கண்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை. அதேநேரம், மார்ச் 1, 2019 க்குப் பிறகு எந்த ஒரு நிறுவனத்திலும் எந்தப் பதவியிலும் முதல் முறையாக சேர்ந்த ஆசிரியர்கள் NET அல்லது SLET அல்லது SET அல்லது PhD தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“NET அல்லது PhD இல்லாத பல ஆசிரியர்கள் கல்லூரி நிர்வாகத்தின் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போதைய அறிவிப்பு அவர்கள் வேலையில் தொடர உதவுவது மட்டுமல்லாமல், அவர்கள் மற்ற கல்லூரிகளுக்குச் செல்லவும் உதவும்” என்று ஒரு தனியார் கல்லூரி ஆசிரியர் கூறினார்.
“கடந்த ஆண்டு ஏ.ஐ.சி.டி.இ-(AICTE) யின் புதிய விதிமுறைகளை அமல்படுத்த முயற்சித்தபோது, பல கல்லூரிகள் எம்.ஃபில் பட்டம் பெற்ற ஆசிரியர்களை முந்தைய விதிமுறைகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்டதாகக் கூறின. எனவே, புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு சேர்ந்த ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கும் விதிமுறைகளை நாங்கள் திருத்தியுள்ளோம்,” என்று பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும், ”கட் ஆஃப் தேதிக்கு முன் நியமிக்கப்பட்ட முதல்வர்களுக்கான விதிமுறைகளையும் பல்கலைக்கழகம் தளர்த்தியுள்ளது. முந்தைய விதிமுறைகளின்படி, கட் ஆஃப் தேதிக்கு முன்னர் அவர்கள் நியமிக்கப்பட்டால், அவர்கள் புதிய கல்லூரிக்கு மாறினால், பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை அறிவிக்கும் வரை அவர்கள் புதிய நிறுவனத்தில் முதல்வராக தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள்” என்றும் அந்த அதிகாரி கூறினார்.
“இரண்டு PhD மாணவர்களுக்கு முதல்வர் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று புதிய விதிமுறைகள் கூறுகின்றன. முந்தைய விதிகளின்படி நியமிக்கப்பட்ட முதல்வர்கள் நிர்வாகப் பதவியை வகிக்கும் போது PhD மாணவர்களுக்கு வழிகாட்டுவது கடினம்,” என்று தனியார் கல்லூரி ஆசிரியர் ஒருவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil