/tamil-ie/media/media_files/uploads/2023/07/anna-university-1.jpg)
பாலிடெக்னிக் டிப்ளமா படித்த மாணவர்கள் தொழில்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.12 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். இந்த படிப்பிற்கு ஜூம் 30 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் உறுப்பு பொறியியல் கல்லூரியில் எச்.எல். மண்டோ ஆனந்த் இந்தியா நிறுவனத்தின் முழு உதவியுடன் பி.இ. எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் என்ற தொழில்பயிற்சியுடன் கூடிய பொறியியல் படிப்பு வழங்கப்படுகிறது. இங்கு வாரத்தில் ஆறு நாட்கள் 8 மணி நேர செயல்முறை பயிற்சி கொடுக்கப்படும்.
சேர்க்கை, வைப்புத்தொகை, செமஸ்டர் கட்டணம், விடுதி தங்குமிடம், உணவகக் கட்டணம், போக்குவரத்து மற்றும் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட முழு பாடநெறிக் கட்டணமும் இந்த திட்டத்தின் மூலம் முழுமையாக வழங்கப்படும்.
இந்த 4 ஆண்டு கால பட்டப் படிப்பில் பாலிடெக்னிக் டிப்ளமா ( எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், இசிஇ, மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஆட்டோ மொபைல்) படித்து முடித்தவர்கள் சேரலாம். இதன்மூலம் டிப்ளமோ படித்தவர்கள் தொழில்துறையில் பணிபுரியும் போது பொறியியல் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
தற்போது 2025-2026 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதற்காக cfa.annauniv.edu/cfa என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். கடந்த 2022, 2023, 2024- ம் ஆண்டுகளில் படித்து முடித்தவர்களும் நடப்பு கல்வி ஆண்டில் டிப்ளமா படிப்பை முடிக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். டிப்ளமா மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜுன் 30 ஆம் தேதி ஆகும்.
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் மற்றும் ஐடி ஆகியவற்றில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பட்டப்படிப்பை முடித்த பிறகு, மாணவர்களுக்கு கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் இருப்பதால் பல மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும். செமிகண்டக்டர் மற்றும் பிற தொழில்களுக்கு திறமையான மனிதவளத்தை உருவாக்க இதுபோன்ற திட்டங்கள் வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜே.பிரகாஷ் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.