கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கல்வி நிறுவனங்களில் வகுப்புகளும், தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளதால்,இனி ஆன்லைன் தேர்வு கிடையாது என்றும், அடுத்த மாதம் இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நேரடியாக நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " முதுநிலை மற்றும் முழு நேர பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளில் வரும் ஆய்வக படிப்புகள், பாடத்துடன் கூடிய ஆய்வக படிப்புகள், தேர்ந்தெடுக்கப்பட்டப் படிப்புகள் மற்றும் பி.ஆர்க்., எம்.ஆர்க் படிப்புகளுக்கு செப்டம்பர் - டிசம்பர் கல்வியாண்டில் அனைத்து Internal, practical உள்ளிட்ட தேர்வுகள் இனி நேரடியாக நடத்தப்படும்.
மேலும், பிஆர்க் மாணவர்களுக்கு கட்டாய கல்விச் சுற்றுலாவைத் தேவைப்பட்டால் கல்லூரிகள் ரத்து செய்துகொள்ளலாம். அதற்குப் பதிலாக, ஒவ்வொரு மாணவரும் கட்டிடக்கலை குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கலாம்.
மேலும், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கான நெட்வொர்க் இணைப்பு சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, ஐந்து வகுப்புகள் மட்டுமே ஆன்லைன் கலந்துகொள்ள அனுமதியளிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியர் மாணவர்களுக்கான தேர்வும் நேரடியாக தான் நடத்தப்படவுள்ளது. சில கல்லூரிகள், மாணவர்களுக்கு மூன்று மணி நேரம் தேர்வு எழுத பயிற்சி அளிப்பதற்காக, மாதிரி தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil