தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கடந்த 12-ம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் கட்டணத்தில், கணினி, ஆய்வகம் போன்ற கூடுதல் கட்டணங்களை தள்ளுபடி செய்யுமாறு அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் துணைவேந்தர் எம்.கே.சரப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில்," யுஜி, மற்றும் பிஜி மாணவர்கள் தங்கள் செமஸ்டர் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும். வழக்கமாக வசூலிக்கப்படும் அனைத்து கட்டணங்களை இந்த முறையும் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்படும்" என்று தெரிவித்தது.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் எழுதிய கடிதத்தில், " கொரோனா பெருந்தொற்று போன்ற ஒரு நெருக்கடி காலத்தில், இந்த சுற்றறிக்கை மாணவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாம் இன்னும் பொது முடக்கநிலையில் தான் உள்ளோம்.பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. தற்போது, மாணவர்களும் அனைவரும் ஆன்லைன் வகுப்புகளில் மட்டுமே கலந்துகொள்கிறார்கள். எனினும், கல்வி கட்டணங்களைத் தவிர கல்லூரி மேம்பாட்டுக்கான கட்டணம், நூலக கட்டணம், இன்டர்நெட், விளையாட்டு, கணினி மற்றும் இதர லாப் கட்டணம், மருத்துவ உபகரணங்களுக்கான கட்டணம், போன்ற கட்டணங்களை செலுத்துமாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. பெருந்தொற்று காலத்தில் இந்த சுற்றறிக்கை மாணவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்" என்று தெரிவிக்கப்பட்டது.
பொறியியல் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் அக்டோபர் 28-ம் தேதி முதல் நடைபெற வேண்டும் என்றும், செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் 9-ம் தேதியுடன் முடிவடையும் என்றும் அண்ணா பலகலைக்கழகம் முன்னதாக தெரிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil