அடுத்த 2025-26 கல்வியாண்டு முதல் பல்கலைக்கழகத் துறை கல்லூரிகளில் பல்வேறு இளங்கலை (UG) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாற்றியமைக்க அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் முன்மொழிந்துள்ளதாக டி.டி நெக்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துறை கல்லூரிகளாக கிண்டி பொறியியல் கல்லூரி (CEG), மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT), குரோம்பேட்டை, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி (AC Tech) கிண்டி; மற்றும் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி (SAP) கிண்டி ஆகிய கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் தற்போது இளங்கலை படிப்புகளில் சுமார் 2,800 மாணவர்களும், முதுகலை படிப்புகளில் சுமார் 900 மாணவர்களும் சேர்க்கை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், பல்கலைக்கழகத் துறை கல்லூரிகளில் இளநிலை படிப்புகளின் மாணவர் சேர்க்கையை மாற்றியமைக்கவும் முதுகலை (PG) படிப்புகளை மறுசீரமைக்கவும் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் முன்மொழிந்துள்ளது. பல்கலைக்கழகத்தின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான சிண்டிகேட்டின் சமீபத்திய 45வது கூட்டத்தில், இளங்கலை (UG) சேர்க்கையை திருத்தி, முதுகலை படிப்புகளை மறுசீரமைக்கும் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது.
2025-26 கல்வியாண்டிலிருந்து பல்கலைக்கழகத் துறை கல்லூரிகள் வழங்கும் பல்வேறு இளங்கலை (UG) படிப்புகளுக்கான திருத்தப்பட்ட மாணவர் சேர்க்கையை (15% சூப்பர்நியூமரரி இடங்கள் உட்பட) சிண்டிகேட் உறுப்பினர்கள் அங்கீகரித்தனர். மேலும், இந்த கல்வியாண்டு முதல் பல்கலைக்கழகத் துறைகளில் பல்வேறு முதுகலை படிப்புகளை மறுசீரமைப்பதற்கும் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர்.