அடுத்த 15 ஆண்டுகளுக்கு செயற்கை நுண்ணறிவு துறைகளில் அதிக வாய்ப்பு இருக்கும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார்.
மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கலந்துக் கொண்டார்.
இந்த விழாவில் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றிய கல்லூரி தாளார் ஹரி தியாகராசன், ”உலகளவில் ‘டைம்ஸ் உயர் கல்வி’ நடத்திய ஆய்வில் தியாகராசர் கல்லூரி 1201-ல் இருந்து 1500 இடையேயான தர நிலையைப் பெற்றுள்ளது. இந்த தரவரிசையில் இந்தியாவில் இருந்து வெகு சில கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. ஐ.டி துறையில் வேலை வாய்ப்பு சற்று குறைந்தாலும், பிற துறைகளில் வேலை உள்ளது. இருப்பினும், மாணவர்கள் உயர் கல்வி கற்க வேண்டும்,” என்று கூறினார்.
பின்னர், விழாவில் பேசிய அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ், ”இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள நாடு இந்தியா. அதிலும், அதிகம் படித்த இளைஞர்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவின் வளர்ச்சி இளைஞர்கள் கையில் உள்ளது. இளைஞர்கள் தங்களது பலம், பலவீனம் அறிந்து செயல்பட வேண்டும். இளைஞர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது போதைப்பொருளும், கைப்பேசியும் தான். இவ்விரண்டுக்கும் அடிமையாவதை தவிர்க்கவேண்டும்.
இந்தியாவில் இன்னும் 20 ஆண்டுகளில் மட்டும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. இதை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் இந்திய மாணவர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்குகின்றன. அடுத்த 15 ஆண்டுகளுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த துறைகளுக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் வேலை தேடுவதை தவிர்த்து, தொழில் முனைவோர்களாக மாற வேண்டும். இளைஞர்கள் தங்களது குறிக்கோள்களை நோக்கி செயல்பட்டால் வெற்றி பெறலாம். பணம் சம்பாதிக்கலாம். படிப்பை முடித்த மாணவர்கள் எந்த வேலையில் சேர்ந்தாலும் முழு ஈடுபாட்டுடனும், விருப்பத்துடன் பணியாற்ற வேண்டும். தோல்விகளை கற்றுக் கொள்வற்கான வாய்ப்பாக பாருங்கள். நல்ல சிந்தனைகளை கொண்டவர்களுடன் பழகுங்கள்.” இவ்வாறு வேல்ராஜ் உரையாற்றினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“