பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டியது என்ன என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் உயர்கல்வியில் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். குறிப்பாக பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை பொறியியல் படிப்புகளில் சேர ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்தநிலையில், பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டியது என்ன என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அதன்படி, பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை சரிபார்க்க வேண்டும். 80% கல்லூரிகளில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அதேநேரம் 40% கல்லூரிகளில் தான் போதிய அளவு ஆசிரியர்கள் உள்ளனர். அந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கப்படுகிறது. அறிவு பரிமாற்றம் நடைபெறுகிறது. எனவே நல்ல ஆசிரியர்கள் இல்லாத கல்லூரிகளில் மாணவர்கள் சேரக் கூடாது.
பொறியியல் படிப்புகளை படிக்க கணிதத்தில் சிறந்த அறிவு அவசியம். எனவே 12 ஆம் வகுப்பில் கணித பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதை விட பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளில் சேரலாம். எனவே கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள் இன்ஜினியரிங் படிப்புகளில் சேரலாம். குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் பி.எஸ்.சி மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேருவது சிறந்தது. இந்தப் படிப்புகளுக்கு கணிதம் பெரிதாக தேவையில்லை. எனவே கணிதத்தில் குறைந்தது 80% மதிப்பெண்கள் பெற்றவர்கள் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்வது நல்லது. இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“