தமிழகத்தில் 44 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிக்க மாணவர்களிடம் ஆர்வம் இல்லாததால், பொறியியல் இடங்கள் அதிக அளவில் காலியாக இருந்தன. இருப்பினும் கடந்த 2 வருடங்களாக பொறியியல் படிப்புக்கு மவுசு அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 2 கலந்தாய்வுகளில் தலா 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பொறியியல் படிப்புகளில் சேர்க்கைப் பெற்றுள்ளனர்.
கணினி அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள நாட்டம் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் பொறியியல் சேர்ந்த சுமார் 50% மாணவர்கள் கணினி அறிவியல் சார்ந்த படிப்புகளையே தேர்வு செய்துள்ளனர். மறுபுறம் மாணவர்களிடம் தலைசிறந்த கல்லூரிகளில் படிக்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளது.
அதேநேரம் தரம் குறைவான கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகக் குறைவாக இருந்தது. ஒரு சில கல்லூரிகளில் 50 மாணவர்களுக்கும் குறைவாக சேர்க்கைப் பெற்றுள்ள நிலையில், 44 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிக குறைவாக உள்ளது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் 10%க்கும் குறைவான மாணவர் சேர்க்கையே நடந்துள்ளது. 35 கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளன. இந்த கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கங்களை பெற்றிருக்கிறோம். தற்போது நேரில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. எங்களுக்கு திருப்தி அளிக்காவிட்டால் வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை முற்றிலுமாக நிறுத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“