Anna University Warning Tamil News : மற்றவர்களின் தேடல்களை தங்களின் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாதிகள் இங்கு ஏராளமானவர்கள் உண்டு. அந்த வரிசையில் தற்போது அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் வேட்பாளர்களும் சில சந்தர்ப்பவாதிகளுக்கு இறையாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இதுபோன்ற இடைத்தரகர்கள் செயல்களுக்கு இறையாகவேண்டாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது.
சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் அதன் நான்கு வளாகங்களில், உதவி பேராசிரியர்கள் (139), இணைப் பேராசிரியர்கள் (106) மற்றும் பேராசிரியர்கள் (67) உள்ளிட்ட 312 காலியிடங்களை ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு அறிவித்தது. இந்த காலி பணியிடங்களுக்கு 2000-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, "சில அங்கீகரிக்கப்படாத நபர்கள் தங்களுடைய பெயர்கள் தேர்வு பட்டியலில் இருப்பதாகக் கூறி அவர்களைத் தொடர்புகொள்கிறார்கள் என்றும், அவர்கள் நிச்சயம் பேராசிரியர்களாக நியமிக்கப்படலாம் என்று கூறியும் ஒரு சில விண்ணப்பதாரர்களிடமிருந்து சரியான சான்றுகளுடன் புகார்கள் வந்துள்ளன" என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எல்.கருணாமூர்த்தி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட அங்கீகாரமற்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், "விண்ணப்பதாரர்கள் அத்தகைய தொலைபேசி அழைப்புகள் / வேறு எந்த தகவல்தொடர்பு முறைக்கும் மற்றும் இதுபோன்ற எந்தவிதமான தூண்டுதல்களுக்கும் இரையாக வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என எச்சரித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"