b-ed exam date : பி.எட். தேர்வுக்கான தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வும் அதே நாளில் வருவதால் தேதியை உயர் கல்வித்துறை மாற்றி அமைத்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்காக ஏற்கனவே பல அரசு துறை தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் மற்றும் பி.எட் தேர்வுகள் ஒரே தேதியில் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பி.எட் தேர்வுக்கான தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை, தேர்வுகள் இம்மாதம் 29ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் வரை நடைபெறுகிறது. ஆசிரியர் படிப்பில் இரண்டாமாண்டு இளநிலை மாணவர்கள் டெட் எழுதத் தகுதியுடையவர்கள் ஆவர்.
இதற்கிடையே டெட் தேர்வுக்கான அறிவிப்பு நேற்று வெளியானது. இரண்டு தாள்கள் கொண்ட இந்தத் தேர்வில் வரும் ஜூன் 8ஆம் தேதி முதல் தாளும், ஜூன் 9ஆம் தேதி இரண்டாவது தாளுக்கான தேர்வும் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் அறிவித்தது. இதற்காகக் கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தமாக 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பி.எட் இரண்டாமாண்டு தேர்வு நடைபெறும் ஜூன் 8ஆம் தேதியே டெட் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால், பி.எட் மாணவர்கள் எந்த தேர்வை எழுதுவது என குழப்பமடைந்திருந்தனர். தேர்வு தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில், மாணவர்களின் நலன் கருதி ஜூன் 8ஆம் தேதி நடக்கவிருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றம் செய்யப்படுவதாகவும், ஜூன் 13ஆம் தேதி பிற்பகல் அத்தேர்வு நடைபெறும் என்றும் உயர்கல்வித் துறை அறிவித்திருக்கிறது.
நேற்றைய தினம் அறிவிப்பு வெளியானதில் இருந்து குழம்பிய மாணவர்களுக்கு பதில் கிடைத்து விட்டது. இதனால் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.