தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. வரலாற்றில் முதல் முறையாக 600 க்கு 600 மதிப்பெண் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வணிகவியல், பொருளாதார பாடத்திலும் அதிகளவு மாணவர்கள் முழுமதிப்பெண் எடுத்தனர். இதானல் கல்லூரிகளில் கட் ஆஃப் மதிப்பெண் 100% அதிகரித்துள்ளது என டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் தெரிவித்துள்ளது.
நேற்று சென்னை கல்லூரிகள் (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட முதல் பட்டியலில் பி.காம் கட்-ஆஃப் 100% ஆக உயர்ந்துள்ளது. இதனால் கணிசமான அளவு மதிப்பெண்கள் பெற்றவர்கள் கூட சிறந்த கல்லூரியில் சேர முடியாது நிலை உள்ளது.
எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை கிறிஸ்துவ கல்லூரிகளில் ஓபன் பிரிவில் 100% கட்-ஆஃப் மதிப்பெண் அதாவது 400க்கு 400 என உள்ளது. லயோலா கல்லூரி, டி.ஜி வைஷ்ணவ் கல்லூரி மற்றும் சில கல்லூரிகள் கட் ஆஃப் மதிப்பெண் 99% ஆக உள்ளது.
வணிகவியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட நான்கு முக்கிய பாடங்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் பி.காம் சேர்க்கை நடத்தப்படுகிறது, மாணவர்கள் நான்கு பாடங்களில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ஓபன் பிரிவு மட்டும் அல்லாது மற்ற பிரிவினருக்கும் அதிக கட்-ஆஃப் உள்ளது. பி.சி சமூக மாணவர்களுக்கு 99.75% மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கு 99% ஆக கட்-ஆஃப் மதிப்பெண் உள்ளது. கல்லூரி முதல்வர் உமா கௌரி கூறுகையில், பி.காம் ஹானர்ஸ் இந்த ஆண்டு மிகவும் பிரபலமான படிப்புகளில் ஒன்றாகும். இதுவரை, பி.காம் படிக்க வணிகக் கணிதம் கட்டாயம் என்பதை நாங்கள் வலியுறுத்தி வந்தோம். தற்போது அரசாங்கத்தின் வழிகாட்டுதல் படி அந்த நிபந்தனையை நீக்கியுள்ளோம். கட்-ஆஃப் மதிப்பெண் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம் என்று கூறினார்.
சென்னை கிறிஸ்துவ கல்லூரி முதல்வர் பால் வில்சன் கூறுகையில், செல்ஃப் ஸ்ட்ரீம் பிரிவிலும் பி.காம் கணக்கியல் மற்றும் நிதிக்கான கட்-ஆஃப் 100% ஆக அதிகரித்துள்ளது. பி.காம் மிகவும் பிரபலமான படிப்புகளில் ஒன்றாகும். இரண்டாவது மற்றும் மூன்றாவது பட்டியலில் கட்-ஆஃப் மதிப்பெண் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
இதற்கு அடுத்தபடியாக பி.சி.ஏ மற்றும் பி.எஸ்.சி கணினி அறிவியல் படிப்புகளை மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர். அதே நேரத்தில் கலை பிரிவில் பி.ஏ (பொருளாதாரம்) படிப்புகளுக்கு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. 3000 இடங்களுக்கு
30,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பல்வேறு கல்லூரி நிர்வாகங்கள் கூறின.
டி.ஜி வைஷ்ணவ் கல்லூரியில், கடந்த ஆண்டு 98% இருந்த பி.காம் கட்-ஆஃப் தற்போது 99.5% ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் 12-ம் வகுப்பில் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றது தான். லயோலா கல்லூரியில் கட்-ஆஃப் மதிப்பெண் 99% ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“