/indian-express-tamil/media/media_files/2025/11/04/canada-rejects-74-of-indian-student-visa-2025-11-04-10-11-10.jpg)
கனடா மாணவர் விசா: 74% இந்திய விண்ணப்பங்கள் நிராகரிப்பு - உலகளவில் இதுவே உச்சம்!
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், ஆக.2025-ல் கனடாவுக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்களில் 4-ல் 3 பங்கு (74%) நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ குடியேற்றத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த 74% நிராகரிப்பு விகிதம், ஆகஸ்ட் 2023-ல் 32% ஆக இருந்ததிலிருந்து தொடர் அதிகரிப்பைக் காட்டுகிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒப்பீட்டளவில், உலகளாவிய மாணவர் அனுமதி விண்ணப்பங்களில் சுமார் 40% மட்டுமே 2 ஆண்டுகளிலும் மறுக்கப்பட்டன, அதே நேரத்தில் சீன மாணவர்களுக்கான நிராகரிப்பு விகிதம் 24% ஆக மட்டுமே இருந்தது. இந்திய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையும் வியத்தகு அளவில் குறைந்துள்ளது. ஆக.2023-ல் 20,900 ஆக இருந்த விண்ணப்பங்கள், ஆக.2025-ல் 4,515 ஆக சரிந்துள்ளது. இந்தச் சரிவு இருந்தபோதிலும், 1,000-க்கும் மேற்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்களைக் கொண்ட அனைத்து நாடுகளிலும் இந்தியாவே அதிக நிராகரிப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
டெல்லிக்கும் கனடாவின் ஒட்டாவாவுக்கும் இடையே நிலவும் ராஜதந்திர பதட்டங்களின் பின்னணியில் இந்த விசா நிராகரிப்பு அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு, கனடாவின் சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் ஒருவர் 2023-ல் கொல்லப்பட்டதில் இந்தியத் தலையீடு இருப்பதாக முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியபோது இருநாட்டு உறவுகளும் மோசமடைந்தன. இந்தக் குற்றச்சாட்டை இந்தியா மீண்டும் மீண்டும் கடுமையாக மறுத்து வருகிறது.
2023-ல் 1,550 க்கும் மேற்பட்ட போலி படிப்பு அனுமதி விண்ணப்பங்களைக் கண்டறிந்த பிறகு, கனடாவின் குடியேற்றத் துறை மோசடி கண்டறியும் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இந்திய முகவர்களிடமிருந்து வந்த போலி சேர்க்கைக் கடிதங்களுடன் இணைக்கப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு, மேம்படுத்தப்பட்ட சரிபார்ப்பு அமைப்புகள் உலகளவில் 14,000 க்கும் மேற்பட்ட மோசடியான ஆவணங்களைக் கண்டறிந்தன. தொடர்ந்து, கனடாவில் படிக்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கான நிதித் தேவைகளையும் அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர் மற்றும் சோதனைகளை கடுமையாக்கியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து ஒட்டாவாவில் உள்ள இந்தியத் தூதரகம் கருத்து தெரிவிக்கையில், அதிக நிராகரிப்பு விகிதங்களைக் கவனித்ததாகக் கூறியுள்ளது, அதே நேரத்தில் உலகின் தலைசிறந்த மாணவர்களில் பலர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதை வலியுறுத்தியது. "கனடியப் பல்கலைக்கழகங்கள் இந்திய மாணவர்களின் திறமை மற்றும் கல்வித் தகுதியால் நீண்டகாலமாகப் பயனடைந்து வருகின்றன" என்று தூதரகம் கூறியது.
இதற்கிடையில், கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், அக்டோபர் மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது ராய்ட்டர்ஸிடம் கூறுகையில், ஒட்டாவா இந்திய மாணவர்களை வரவேற்பதில் உறுதியாக உள்ளது, ஆனால் "குடியேற்ற அமைப்பின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும்" என்றார்.
கனடா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் இந்திய மாணவர் சேர்க்கையில் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய பொறியியல் கல்லூரியை கொண்ட வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில், இளங்கலை, முதுகலை திட்டங்களில் சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 3-ல் 2 பங்கு குறைந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
வாட்டர்லூவின் சேர்க்கை மேலாண்மைக்கான இணைத் துணைத் தலைவர் இயன் வாண்டர்பர்க், வெளிநாட்டு மாணவர் விசாக்களுக்கு அரசாங்கம் விதித்துள்ள வரம்பே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்று கூறினார், இது பல்கலைக்கழகத்தின் மாணவர் கலவையை மாற்றியுள்ளது. "நாங்க ஒரு சர்வதேச நிறுவனமாக இருப்பதில் பெருமை கொள்கிறோம்," என்று வாண்டர்பர்க் மேற்கோள் காட்டப்பட்டார். ரெஜினா பல்கலைக் கழகம் மற்றும் சஸ்காட்செவன் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் இந்திய மாணவர் எண்ணிக்கையில் இதேபோன்ற சரிவைக் கண்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us