நீட் தேர்வு (NEET-UG) வழக்கின் வினாத்தாள் கசிவு உண்மையில் ஜார்கண்டின் ஹசாரிபாக்கில் நடந்தது என்பதை மத்திய புலனாய்வு அமைப்பு செவ்வாய்கிழமை உச்ச நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தியது. ஜூன் மாதம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பிறகு, சி.பி.ஐ அதிகாரப்பூர்வமாக வினாத்தாள் கசிவை ஒப்புக்கொண்டது இதுவே முதல் முறை.
உச்ச நீதிமன்றத்தின் முன் நடந்த விசாரணையில், சி.பி.ஐ, ஹசாரிபாக்கின் ஒயாசிஸ் பள்ளியில் மே 5 அன்று தேர்வு நாளில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டது என்று கூறியது. அதே பகுதியில் வினாத்தாளுக்கு விடைகள் கண்டறியப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக ஒயாசிஸ் பள்ளி முதல்வர் எஹ்சானுல் ஹக் மற்றும் மைய கண்காணிப்பாளர் இம்தியாஸ் ஆலம் ஆகியோர் ஏற்கனவே சி.பி.ஐ காவலில் உள்ளனர். இருவரும் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளனர்.
சி.பி.ஐ தனது வாதங்களில், வினாத்தாள் கசிவுக்குப் பதிலாக எஹ்சானுல் ஹக் மற்றும் இம்தியாஸ் ஆலம் பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், பிந்தைய தேதியிட்ட காசோலைகளை மீட்டெடுத்ததாகவும் கூறியது. "ஒரே தவணையாக பணம் கொடுக்கப்படவில்லை" என்று சி.பி.ஐ கூறியது.
மேலும் விளக்கமாக கூறிய சி.பி.ஐ, சந்தேகப்படும் கிங்பின்களில் ஒருவர் தேர்வு நாளன்று காலையில் வினாத்தாள்களை அணுகுவதற்கான கருவித்தொகுப்புடன் பள்ளியின் வலுவான அறைக்குள் நுழைந்ததாகக் கூறியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வினாத்தாளை புகைப்படம் எடுத்து, அதை ஹசாரிபாக்கில் உள்ள ‘விடை கண்டறியும் குழுவிற்கு’ அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
“முக்கிய குற்றவாளியான பங்கஜ் குமார் என்கிற ஆதித்யா, ஒயாசிஸ் பள்ளியில் உள்ள ஸ்ட்ராங்ரூமை அணுகியதைக் காட்ட எங்களிடம் சி.சி.டி.வி காட்சிகள் உள்ளன. அனைவருக்கும் முன்பாக முன் கதவு பூட்டப்பட்டது மற்றும் சாவி மைய கண்காணிப்பாளரிடம் இருந்தது. இருப்பினும், யாரையாவது நுழைய அனுமதிக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, மையக் கண்காணிப்பாளரும், நகர ஒருங்கிணைப்பாளரும் வேண்டுமென்றே பின்புறக் கதவின் உள் போல்ட்டைத் திறந்து வைத்திருந்தனர். குற்றவாளி பங்கஜ்குமார் காலை 7.12 மணிக்கு வளாகத்திற்குள் நுழைந்து ஸ்ட்ராங் ரூமை ஒட்டிய பணியாளர் அறையில் அமர்ந்துள்ளார். எனவே, காலை 7.53 மணிக்கு ஸ்டராங் அறையின் முன் கதவு பூட்டப்பட்டது… 8.02 மணிக்கு பின் கதவில் இருந்து, இந்த நபர் பின்னால் இருந்து நுழைந்து 9.23 மணிக்கு வெளியேறினார்,” என்று சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
பங்கஜ் குமார், எடுக்கப்பட்ட புகைப்படங்களை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவருக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது, அவர் அதை "விடை கண்டறியும் குழுவுடன்" பகிர்ந்து கொண்டார், இங்கு மருத்துவ மாணவர்கள் வினாத்தாளை "தீர்க்க" பணியமர்த்தப்பட்டனர்.
“பின்னர் புகைப்படங்களின் பிரிண்ட்அவுட் எடுக்கப்பட்டது. வினாத்தாளுக்கு விடை கண்டறியப்பட்ட பிறகு, ஹார்ட் காப்பி ஸ்கேன் செய்யப்பட்டு, ஹசாரிபாக் மற்றும் பாட்னாவில் உள்ள இரண்டு இடங்களுக்கு அனுப்பப்பட்டது,” என்று சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
கசிந்த வினாத்தாள் மற்ற மையங்களுக்கும் அனுப்பப்பட்டதா என்ற இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் கேள்விக்கு, தங்களின் விசாரணையைப் பொறுத்த வரையில், பீகார் மற்றும் பாட்னாவில் நான்கு இடங்களில் மட்டுமே தீர்க்கப்பட்ட வினாத்தாளின் ஸ்கேன் நகல்கள் கிடைத்துள்ளதாக சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் சி.பி.ஐ சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "பாட்னாவில் 30 மாணவர்களும், ஹசாரிபாக்கில் 125 மாணவர்களும் என 155 மாணவர்கள் வினாத்தாள் கசிவால் பயனடைந்துள்ளனர்" என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.