சி.பி.எஸ்.இ 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 20-ம் தேதிக்குப் பிறகு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவு வெளியாகும் தேதி குறித்து சமூக ஊடகங்களில் போலியான அறிக்கைகள் வெளிவந்த நிலையில், சி.பி.எஸ்.இ இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் எனப்படும் சி.பி.எஸ்.இ, மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. சி.பி.எஸ்.இ பாடத் திட்டங்கள் மத்திய அரசால் வகுக்கப்படுகிறது. மாநிலக் கல்வி திட்டத்தில் இருப்பது போலவே சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்திலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறுகிறது. இந்தாண்டிற்கான பொது தேர்வு கடந்த மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெற்று முடிந்தது.
தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்வி திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் முடிந்த நிலையில், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே-6 திங்கட்கிழமை வெளியடப்பட உள்ளது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ வாரியம் இதற்கு அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இந்த மாதம் 20-ம் தேதிக்குப் பிறகு சி.பி.எஸ்.இ 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் எனக் கூறியுள்ளது. எனினும் முடிவுகள் வெளியாகும் அதிகாரப்பூர்வ தேதியை சி.பி.எஸ்.இ விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“