CBSE 10th Board Exam 2020: சிபிஎஸ்இ ( மத்திய இடைநிலை கல்வி வாரியம்) 2020ம் ஆண்டிற்கான 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு விண்ணப்ப நடவடிக்கைகளை துவக்கியுள்ளது. இதன்மூலம், சிபிஎஸ்இ பள்ளிகள் தேர்வுகள் எழுத தயாராகும் மாணவர்களின் பட்டியலை தயாரிக்க ஆயத்தமாகியுள்ளன. மாணவர்களின் பட்டியல் தயாரிப்பு தொடர்பாக, மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளிகள் சார்பில் அறிவுறுத்தப்பட வேண்டிய விசயங்கள் குறித்து சிபிஎஸ்இ விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.
மாணவர்களின் தேர்வு விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்வதற்கு முன், பெற்றோர்கள் கீழக்கண்ட விதிமுறைகளை நன்கு அறிந்து அதற்கேற்பபடிவத்தை பூர்த்தி செய்து, மாணவர்கள், கடைசிநேர இன்னல்களை தவிர்க்க ஒத்துழைக்க வேண்டும். கடைசி நேரத்தில், இந்த படிவத்தில் மாற்றம் ஏதும் செய்ய நேரிட்டால், அபாரதம் கட்ட வேண்டிவரும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CBSE 10th Board Exam 2020 : தேர்வு விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்கள்...
மாணவரின் பெற்றோர் ( தந்தை, தாய்)/ கார்டியன் ஆகியோரின் பெயர்களை முழுமையாக எழுத வேண்டும். உதாரணமாக, மாணவரின் பெயர் ரவி குமார் சிங் எனில், ரவி கே சிங் என்று எழுதக்கூடாது.
தேர்வு விண்ணப்ப படிவத்தில் மாணவரின் பிறந்தநாள் எனும் இடத்தில், மாணவரின் பிறப்புச்சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதியை தான் குறிப்பிட வேண்டும். இல்லையேல், மாணவரின் பள்ளிச்சேர்க்கையின் போது வழங்கியிருந்த பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும். மாறுதல் இருப்பின் மாணவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், பெற்றோர் அதிக கவனத்துடன் இருப்பது நலம்.
சப்ஜெக்ட் கோடுகளை குறிக்கும் போது ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக்கொள்வது நல்லது. இந்த படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சப்ஜெக்ட் கோடுகளுக்கு மட்டுமே, மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்பதால் இந்த விசயத்தில் அதிக கவனம் அவசியம். ஹால் டிக்கெட் உள்ளிட்டவைகளில் குறிப்பிடப்பட உள்ளதால், அதிக கவனம் அவசியம்.
கணக்கு பாடம் குறிக்கும்போது சிறப்பு கவனம் அவசியம். சிபிஎஸ்இ நிர்வாகம், 2020ம் ஆண்டுமுதல் கணிதம் தேர்வு, அடிப்படை கணிதம் மற்றும் ஸ்டாண்டர்ட் கணிதம் என 2 கட்டங்களாக நடைபெறும். கணித தேர்விற்காக சப்ஜெக்ட் கோடு குறிப்பிடும்போது அதிக கவனம் பெற்றோருக்கு இருத்தல் அவசியம்.
தேர்வு விண்ணப்ப படிவத்தில், பெற்றோர் / கார்டியன் கையெழுத்து மிகவும் அவசியம். ஹால் டிக்கெட்டில் இருப்பதைப்போன்று, தேர்வு விண்ணப்ப படிவத்தில் பெற்றோர் அல்லது கார்டியன் கையெழுத்தை, 2019ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியுள்ளது. பெற்றோர் அல்லது கார்டியன் கையெழுத்து இல்லாத தேர்வு விண்ணப்ப படிவம் நிராகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், பெற்றோர்கள் கவனமாக இருப்பது நலம்.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு சான்றிதழ்களில் குறிப்பிடப்படும் பிறந்த தேதி, பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது என்பதால், எவ்வித தவறும் இல்லாமல், தேர்வு விண்ணப்ப படிவம் மட்டுமல்லாது அதுதொடர்பான எல்லா படிவங்களையும் பிழையில்லாமல் நிரப்பி தருமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களையும், அவர்கள் வழங்கிய விபரங்களை சரிபார்க்குமாறு பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.