தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வியாழக்கிழமை வெளியானது. பல்வேறு மாநிலங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும், சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் தற்போது வரை வெளியாகவில்லை. இதனால், சி.பி.எஸ்.இ மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் 2025-ம் ஆண்டுக்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்கீழ் படித்த மாணவர்களுக்கு கடந்த பிப்.15-ம் தேதி தொடங்கி ஏப்.4-ம் தேதி வரை 12-ம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. இந்த ஆண்டு இந்தியா மற்றும் 26 நாடுகளில் 7,842 தேர்வு மையங்களில் 42 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர். சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வுகள் கடந்த பிப்.15-ம் தேதி முதல் மார்ச் 18 வரை நடைபெற்றன. இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
தேர்வு முடிவுகளை cbseresults.nic.in., results.cbse.nic.in, cbse.gov.in ஆகிய இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் 12-ம் வகுப்பு ரிசல்ட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். தேர்வு எண்ணையும் பிறந்த தேதியைும் கொண்டு லாகின் செய்தால் முடிவுகள் தெரியும். பின்னர், இதை அப்படியே டிஜிலாக்கர் கொண்டு டவுன்லோடு செய்து கொள்ளலாம். Digilocker-ல் போய் தேர்வு முடிவுகளை பார்க்க உரிய லாகின் தகவல்கள் ஏற்கனவே சி.பி.எஸ்.இ. கூறி உள்ளது.
மாணவர்கள் ரோல் நம்பர், பள்ளி எண், பிறந்த தேதி, ஹால் டிக்கெட் மற்றும் டிஜி லாக்கர் பின் ஆகியவற்றை பயன்படுத்தி மார்க்ஷீட் பெற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் டிஜிலாக்கர் (DigiLocker) செயலி மற்றும் உமாங் (UMANG) செயலி மூலமாகவும் தங்களது டிஜிட்டல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன், எஸ்எம்எஸ் (SMS) மூலமாகவும் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
மாணவர்களை விட மாணவிகள் 5.94% கூடுதல் தேர்ச்சி:
சி.பி.எஸ்.இ.12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகள் 5.94% பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். 91.64% பேர் மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், 85.70% பேர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வில் அதிகபட்சமாக விஜயவாடாவில் 99.60%, குறைந்தபட்சமாக பிரயாக்ராஜில் 79.53% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் 97.93% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு:
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 23 லட்சத்து 71 ஆயிரத்து 939 மாணவ-மாணவிகள் எழுதியதில், 22 லட்சத்து 21 ஆயிரத்து 636 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.66 ஆகும். இது கடந்த ஆண்டைவிட 0.06% ஆகும்.
ஒட்டுமொத்த தேர்ச்சியில் 95 சதவீதம் மாணவிகளும், 92.63 சதவீதம் மாணவிகளும், 95 சதவீதம் மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 2.37 சதவீதம் அதிகம். இதில் சென்னை மண்டலம் 98.71 சதவீதத்துடன் 4-வது இடத்தில் இருக்கிறது.தேர்ச்சி பெற்றவர்களில் 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 1 லட்சத்து 99 ஆயிரத்து 944 பேரும், 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 45 ஆயிரத்து 516 பேரும் ஆவார்கள்.
தேர்ச்சி சதவீதத்தில் நாட்டில் தென் மாநிலங்களில் தான் அதிக தேர்ச்சி இருக்கிறது. அதாவது, தமிழ்நாடு கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் 95 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்றிருக்கின்றன. மற்ற மாநிலங்கள் அதைவிட குறைவாகவே தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளன.
தேர்வு முடிவுகள் குறித்த ஆவணங்கள் அந்தந்த மாணவ-மாணவிகளின் டிஜி லாக்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத முடியாமல் போனவர்கள், தேர்வில் தோல்வியை தழுவியவர்களுக்கான துணைத்தேர்வு வருகிற ஜூலை மாதம் 1 அல்லது 2-வது வாரம் நடத்தப்படும் என்றும் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தெரிவித்துள்ளது