CBSE Board Exams : மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்றும், தேர்வு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று சி.பி.எஸ்.இ. செயலர் அனுராக் திரிபாதி தெரிவித்தார். நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், வாரியத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் (அ) ரத்து செய்யப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கைகள் வைத்து வரும் நிலையில் திரிபாதி இவ்வாறு தெரிவித்தார்.
"வரும் கல்வியாண்டிற்கான வாரிய தேர்வுகள் நிச்சயம் நடைபெறும், தேர்வு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும். மாணவர்களை மதிப்பீடு செய்யும் முறை தொடர்பாக சிபிஎஸ்இ திட்டங்களை உருவாக்கி வருகிறது,”என்று அசோசாம் அமைப்பு ஏற்பாடு செய்த 'புதிய கல்வி கொள்கை : பள்ளி கல்வியின் பிரகாசமான எதிர்காலம்' குறித்த வெபினாரில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தேர்வுகள் பழைய முறைப்படி இருக்குமா? திட்டமிடப்பட்ட பிப்ரவரி-மார்ச் கால அட்டவணைப்படி நடத்தப்படுமா (அ) ஒத்திவைக்கப்படுமா? என்பது குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை.
"இந்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் ஊரடங்கு கால கட்டத்தில், மாணவர்களுக்கு தகுந்த கல்வியை எப்படி கொண்டு செல்வது என்ற கேள்விக்கு விடைத் தெரியாமல் இருந்தோம். ஆனால், சிபிஎஸ்இ பள்ளிகளும் ஆசிரியர்களும் குறுகிய காலத்தில் தொழில்நுட்பம் சார்ந்த கற்பித்தல்-கற்றல் முறைகளை பழக்கப்படுத்திக்கொண்டனர்," என்று திரிபாதி கூறினார்.
கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன. அக்டோபர் 15ம் தேதிக்குப் பிறகு, சில மாநிலங்களில் அதீத கட்டுபாடுகளுடன் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும், தமிழகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
பள்ளிகள் தொடர்ந்து செயல்படாத காரணத்தினாலும், கற்பித்தல்-கற்றல் நடவடிக்கைகள் முற்றிலும் ஆன்லைனில் இருப்பதைக் கருத்தில் கொண்டும் வாரியத் தேர்வுகளை மே மாதம் வரை ஒத்திவைக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.