மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சில நாட்களுக்கு முன்பு, தனது பாடத் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) தனி விருப்பத் திறன் பாடமாக அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது, அனைத்து பள்ளிப் பாடங்களிலும் கொண்டு வர முன்வந்துள்ளது. இதற்காக, வரும் மாதங்களில் ஆசிரியர்களுக்கு பிரத்தியோகமாக பயிற்சி அளிக்கவும் முடிவு செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவின் மூன்று முக்கிய கலங்களாக இருக்கும் : டேட்டா நுண்ணறிவு, கம்யூட்டர் விஷன், இயற்கை மொழி செயலாக்கம் போன்ற பாடத் திட்டங்களை இந்த வருட ஆரம்பத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு தனி விருப்பத் திறன் பாடமாக அறிமுகப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செயற்கை நுண்ணறிவு ஒரு அறிவாற்றல் விஞ்ஞானமாய் இருப்பதால், I-XII வகுப்புக்கான அனைத்து பாடத் திட்டங்களிலும் ஒன்றிணைக்க விரும்புகிறது சிபிஎஸ்இ.
ஆங்கிலம், இந்தி, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களோடு செயற்கை நுண்ணறிவைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான முன்மாதிரி பாடத் திட்டக் கையேட்டையும் வெளியிட்டுள்ளது சிபிஎஸ்இ.
இதில், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒரு விளையாட்டு மூலம் பஞ்சாயத்து ராஜ் நிர்வாகத்தை புரிய வைக்கும் வகையில் பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது .
அனைத்து ஆசிரியர்களுக்கும் ஏ.ஐ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்துக் கொள்ள கட்டாயப்படுத்தவும் முடியாது, எனவே முதலில் ஆசிரியர்களுக்கு ஊக்கம் அளிக்கவும், திறன்களை மேம்படுத்தவும் இந்த ஆசிரியர் கையேடு பயன்படும், என்று சிபிஎஸ்இ திறன் கல்வி மற்றும் பயிற்சி இயக்குநர் டாக்டர் பிஸ்வாஜித் சஹா தெரிவித்துள்ளார்.