CBSE : சிபிஎஸ்இ பள்ளிகளின் மாணவர்கள் விரைவில் தங்கள் கற்பனைக்கு சிறகுகளை வழங்குவதோடு, 'கற்பனையின் பரிசு', 'பூக்கள் அழைக்கின்றன', 'வானத்தின் நகைகள்' போன்ற புதுமையான தலைப்புகளில் கதைகளை எழுதுப் போகிறார்கள்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தனது முதல் கதை சொல்லும் போட்டியை அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ-உடன் இணைந்த அனைத்து பள்ளிகளிலிருந்தும் 3 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். பள்ளி, பிராந்திய மற்றும் தேசிய அளவில் இந்த போட்டி நடைபெறும்.
வகுப்பு 3 முதல் 5,
வகுப்பு 6 முதல் 8,
வகுப்பு 9 முதல் 10,
வகுப்பு 11 முதல் 12
என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படுவார்கள்.
போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு வெற்றியாளரைத் தேர்வு செய்ய வேண்டும், பின்னர் அவர்கள் பிராந்திய அளவில் தங்கள் பள்ளி சார்பாக கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு பிரிவிலும் ஒரு வெற்றியாளர் ஒவ்வொரு சிபிஎஸ்இ பிராந்தியத்தில் இருந்தும் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். பின்னர் பிராந்திய அளவிலான வெற்றியாளர்கள் தேசிய சுற்றில் போட்டியிடுவார்கள்.
பள்ளி அளவிலான கதை சொல்லும் போட்டி நவம்பர் 18 முதல் நவம்பர் 23 வரை பள்ளிகளால் நடத்தப்படும்.
ஒவ்வொரு பிரிவிற்கும் ஒதுக்கப்பட்ட தலைப்புகள் கணிதம் மற்றும் அறிவியல் முதல் இலக்கியம் வரை வேறுபடுகின்றன. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு கல்வி தலைப்பு மற்றும் ஒரு கதை சொல்லும் தலைப்பு உள்ளது.
வாரியத்தின் தகவலின் படி, இந்த போட்டி படைப்பாற்றல், சிந்தனை திறன், பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு திறன்களை ஊக்குவிக்கும், தகவல்தொடர்பு திறன்களை வளர்க்க உதவும்.
சிபிஎஸ்இ, கடந்த சில ஆண்டுகளாக , கல்வியை மாணவர்களுக்கு ஒரு முழுமையான அனுபவமாக மாற்ற பல நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.