CBSE : நீர் சேமிப்பது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகம் பரப்பபட்டு வரும் நிலையில், இந்த மாற்றத்தை மாணவர்களிடம் இருந்தும் துவங்க சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி சிபிஎஸ்இ இயக்குநரகம் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
மாணவர் ஒருவர் நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர் தண்ணீரையாவது சேமிப்பதை பள்ளிகள் உறுதிபடுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ’ஜல் சக்தி’ அபியான் திட்டத்தின் கீழ் பள்ளிகளும் மாணவர்களும் பங்கேற்க ஊக்குவிக்கும் வகையில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தனித்தனியாக சிறப்பு சூழல் குழுக்கள் அமைக்கப்பட்டு அவை முறையாக பராமரிக்கப்பட்டு வலுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் தொடக்கப்பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கல்வியோடு சேர்த்து இதுப் போன்ற சமூகநலன் சார்ந்த பணிகளிலும் மாணவர்களை ஈடுப்படுத்த வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.
இதுக் குறித்து சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வால் அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பதாவது, “மாணவர்கள் இனி தண்ணீர் சேமிப்பு பற்றி கற்க தொடங்குவார்கள். தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை சுற்றுச்சூழல் கல்வி ஊக்குவிக்கப்படும். 2029-20 கல்வியாண்டில் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும் இதை நிச்சயமாகப் பின்பற்ற வேண்டும்
அடுத்த மூன்று ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சம் இல்லா பள்ளிகள் உருவாக்க வேண்டும் என்பதே குறிக்கோள். இதை மாணவர்கள் கண்டிப்பாக உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறோம். சூழலியல் குழுக்கள் மூலம் சுற்றுச்சூழல் மட்டுமல்லாது பருவநிலை மாற்றம், தண்ணீர் சேமிப்பு ஆகியவற்றைக் குறித்தும் இனி கற்கத் தொடங்குவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.