CBSE New Rules for Board Exam 2019: கடந்தாண்டு வினாத்தாள் லீக் ஆனதைத் தொடர்ந்து, தேர்வு நடத்தப்படுவதில் அதிரடி மாற்றங்களை செய்துள்ளது சி.பி.எஸ்.இ நாடு முழுவதும் உள்ள 20000 சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இணையதளம் மூலமாக நேரடியாக இது சம்பந்தமான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
டெல்லி மற்றும் பிற இடங்களில் சி.பி.எஸ்.சி வினாத்தாள் லீக் ஆனா விவகாரம் சமூக வலைதளங்களில் அதிக விமர்சனத்துக்குள்ளானது. லீக் ஆன பொருளாதார பாடத்தின் மறுத் தேர்வு, 2018-19-ல் மீண்டும் வைக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு, ”எந்தவொரு காரணத்திற்காகவும், தேர்வு தள்ளி வைக்கப்பட மாட்டாது. அவசரகால சூழ்நிலையில், நாங்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து, தேர்வு நடத்துவோம். அது ஒரு மணிநேரமாக இருந்தாலும் சரி, மூன்று மணிநேரமாக இருந்தாலும் சரி. மண்டல அதிகாரிகள் இது பற்றிய விளக்கத்தை அந்தந்த பள்ளிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்” என சி.பி.எஸ்.இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேர்வறைகள் நன்கு சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும், எந்தவொரு தொடர்பு சாதனங்களையும் மாணவர்கள் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது.
”உள்ளூர் நிர்வாகத்தின் காரணமாக பள்ளிகளில் நிறைய தவறு நடக்கிறது. எனவே, பரீட்சை நாளில், முழு மையமும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட அங்கீகாரமற்ற நபர்கள் மையத்தின் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்றுத் தெரிவித்துள்ளார் சி.பி.எஸ்.இ தலைவர் அனிதா கர்வால்.
அறையில் 24 பேர் மட்டும்...
ஒரு அறையில் 24 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுத வேண்டுமென பள்ளிகளுக்குக் கட்டளையிட்டிருக்கிறது சி.பி.எஸ்.இ நிர்வாகம். அல்லது மிகப்பெரிய ஹாலில் 48, 72 என இருக்கும் படி பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
'மைய கண்காணிப்பாளர்' (centre superintendent) மற்றும் 'நியாயமற்ற வழிமுறைகள்' (unfair means) ஆகியவற்றிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்தாண்டு சி.பி.எஸ்.இ நிர்வாகம் வடிவமைத்துள்ளது.
மேலும், மைய கண்காணிப்பாளருக்கு, பள்ளி முதல்வரால் அதிகாரம் வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் ஒரு துணை மைய கண்காணிப்பாளர் நியமிக்கப்படுவார்.
”சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்புவதில் மாணவர்கள் ஈடுபடுவதும், நியாயமற்ற வழிமுறையாகக் கருதப்பட்டு, நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலை அது உருவாக்கும்” என்கிறார் சி.பி.எஸ்.இ அதிகாரி சன்யாம் பரத்வாஜ். அதோடு பழைய கேள்வித்தாள் மற்றும் தகவல்தொடர்பு சாதனங்களை தேர்வு மையத்துக்குக் கொண்டு வருவதும், 'நியாயமற்ற முறையில்' சேர்க்கப்பட்டுள்ளது.