CBSE Board Exam Date : இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் தடை செய்யப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியுள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு இந்தியாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த 11 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் , மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வு எப்படி நடைபெறும் என்பது குறித்து பெற்றோர்கள் மத்தியில் பெரும் கேள்வி எழுந்தது. தற்போது இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் வரும் மே 4 முதல் ஜூன் 10 வரை நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார். இந்த தேர்வு அட்டவனை cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று நெறிமுறைகளைப் பின்பற்றி தேர்வுகள் நடைபெறும் என்றும், முக கவசம் அணிவது, மாணவர்களிடையே சமூக இடைவெளி அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தேர்வு ஆஃப்லைன் முறையில் நடைபெறும் என்றும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்றும், வரும் மார்ச் 1 முதல் பள்ளிகள் செய்முறைத்தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"