சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சி.பி.எஸ். இ-யில் 11 மற்றும் 12 வகுப்பு தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் இனி, விரிவான தீர்வுகளுடன் கூடிய கேள்விகள் கேட்கப்படும். மேலும் அதை வாழ்வின் உண்மை நிகழ்வுகளுடன் பொருத்திபார்க்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.
இதுபோல விரிவான தீர்வுகள் உடைய கேள்விகள் எம்.சி.க்யூ வகை கேள்விகளாக கேட்கப்படும். இதுபோன்ற கேள்விகளின் சதவிகிதம் 40 % இருந்து 50 % ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோல கட்டமைக்கப்பட்ட சிறிய மற்றும் நீளமான விடைகள் கொண்ட கேள்விகளின் சதவிகிதம் 40% இருந்து 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
” தேசியக் கல்விக் கொள்கை, 2020-ன்படி வாரியம், பள்ளிகளில் திறன் அடிப்படையிலான கல்வியை அமல்படுத்துவதில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது, மதிப்பீட்டை சீரமைப்பது முதல் திறன்கள் வரை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான முன்மாதிரி வளங்களை மேம்படுத்துதல் மற்றும் ஆசிரியர்களின் தொடர்ச்சியான திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என்று சி.பி.எஸ்.இ இயக்குநர் ஜோசப் இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் “ 21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள மாணவர்களின் ஆக்கப்பூர்வமான, விமர்சன மற்றும் அமைப்புமுறை சிந்தனைத் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்தும், மனப்பாடம் செய்வதிலிருந்து விலகி, கற்றலை நோக்கிச் செல்லும் கல்விச் சூழலை உருவாக்குவதே வாரியத்தின் முக்கிய வலியுறுத்தலாகும்” என்று தெரிவித்துள்ளார்.
” இதன் விளைவாக, வரவிருக்கும் அமர்வில், வாரியத்தின் வினாத்தாள்களில் உள்ள நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளில் கருத்துகளின் பயன்பாட்டை மதிப்பிடும் திறன் அடிப்படையிலான கேள்விகளின் சதவீதம் மாற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 9 மற்றும் 10ம் வகுப்புகளின் தேர்வு முறையில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“