சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் பெண்களுக்கு எதிரான கருத்து இடம்பெற்றதாக எதிர்ப்புகள் எழுந்ததால் சர்ச்சையானது. இதையடுத்து சிபிஎஸ்இ கல்வி வாரியம் அந்த சர்ச்சைக்குரிய பத்தியை நீக்குவதாக அறிவித்துள்ளது.
சனிக்கிழமை நடத்தப்பட்ட சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ஆங்கில வினாத்தாளில் "பெண்களின் விடுதலை குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்தை அழித்துவிட்டது போன்ற வாக்கியங்கள் அமைந்த பத்தி இடம்பெற்றிருந்தது.
மேலும், சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் உள்ள ஒரு பத்தியானது பாலின பாகுபாடு கருத்தை ஊக்குவிப்பதாகவும், பிற்போக்கு கருத்துக்களை ஆதரிப்பதாகவும் சர்ச்சையை கிளப்பியது.
அந்த வினாத்தாளில் “பெண் விடுதலை குழந்தைகளின் மீதான பெற்றோரின் அதிகாரத்தை அழித்துவிட்டது. "கணவரின் வழியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தாய் இளையவர்களின் கீழ்ப்படிதலைப் பெற முடியும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பத்தி ஒன்று இருந்தது.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பத்தியின் பகுதிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இது "பெண் வெறுப்பு" மற்றும் "பிற்போக்கு கருத்துக்களை" ஆதரிப்பததாகக் கூறி பலரும் விட்டரில் “சிபிஎஸ்இ பெண்களை அவமதிக்கிறது” என்று குறிப்பிட்டதால் ட்ரெண்டிங் ஆனது.
சிபிஎஸ்இ வினாத்தாளில், பெண்களுக்கு எதிரான கருத்து இடம்பெற்றது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, வத்ராவும் வினாத்தாளை எதிர்த்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “நம்பமுடியவில்லை. நாம் உண்மையில் குழந்தைகளுக்கு இந்த உந்துதலைக் கற்றுக்கொடுக்கிறோமா? பெண்கள் மீதான இந்த பிற்போக்குத்தனமான கருத்துக்களை பாஜக அரசு ஆமோதிக்கிறது.” என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று நடைபெற்ற சிபிஎஸ்இ 10ம் வகுப்பு முதல் பருவத் தேர்வின் ஆங்கிலத் தாளின் ஒரு பத்தி ஒரு சில பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து கலவையான எதிர்வினைகளைப் பெற்றுள்ளது. குடும்பத்தின் மீதான பிற்போக்குத்தனமான கருத்துக்கள் மற்றும் பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
“இந்த விஷயம் சிபிஎஸ்இ நடைமுறைகளின்படி பரிசீலிக்கப்படுவதற்கு பாட நிபுணர்களுக்கு பரிந்துரைக்கப்படும். சிபிஎஸ்இ-ஆல் வெளியிடப்பட்ட சரியான பதில் மற்றும் விடையைப் பொறுத்தவரை, பத்தியில் பல விளக்கங்கள் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்தால், மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத் தாளில் உள்ள பெண்களுக்கு எதிரான கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தினார்.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வுத் தாளில் இருந்து குடும்பங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை ஒழுங்குபடுத்துவது பற்றிய சர்ச்சைக்குரிய பத்தியை நீக்குவதாக தெரிவித்துள்ளது.
கடும் விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ இந்த விவகாரத்தை நிபுணர்கள் குழுவுக்கு அனுப்பியது. இதையடுத்து, அந்த பத்தி கைவிடப்பட்டதாக திங்கள்கிழமை சுற்றறிக்கை வெளியிட்டது.
“இந்த வினாத்தாள் வாரியத்தின் வழிகாட்டுதல்களுக்கு பொருத்தமானதாக இல்லை என்று குறிப்பிட்டு இந்த பத்தி தொடர்பான வினாக்களுக்கு அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்கப்படும்” என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.