பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த ஆண்டு சிபிஎஸ்இ வாரிய தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை வெளியிடப்பட்ட அறிக்கையில், அரசாங்கம் "கொரோனா காரணமாக நிலவும் நிச்சயமற்ற நிலைமைகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட பின்னூட்டங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
"இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் "நன்கு வரையறுக்கப்பட்ட புறநிலை அளவுகோல்களின்படி "தொகுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஒரு மாணவர் தேர்வு எழுத விரும்பினால், கொரோனா நிலைமை உகந்ததாக மாறியவுடன் சிபிஎஸ்இ அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும்.
"கொரோனா நிலைமை நாடு முழுவதும் பல்வேறு மாறுபாடுகளைக் கொண்டுள்ளது என்று பிரதமர் கூறினார். நாட்டில் பாதிப்பு எண்ணிக்கைகள் குறைந்து வருகின்றன, சில மாநிலங்கள் நிலைமையை திறம்பட மைக்ரோ-கன்டெய்ன்மென்ட் மூலம் நிர்வகித்து வருகின்றன, சில மாநிலங்கள் இன்னும் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன, ”என்று அறிக்கையில் கூறுப்பட்டுள்ளது. "இதுபோன்ற சூழ்நிலையில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இயல்பாகவே மாணவர்களின் உடல்நலம் குறித்து கவலைப்படுகிறார்கள். இதுபோன்ற மன அழுத்த சூழ்நிலையில் மாணவர்களை தேர்வுக்கு வருமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்று பிரதமர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பான அடுத்த உச்சநீதிமன்ற விசாரணைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை மாலை கூட்டம் நடைபெற்றது.
ஆதாரங்களின்படி, மே 23 அன்று நடைபெற்ற தேசிய ஆலோசனை குறித்து பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டதோடு, 12 ஆம் வகுப்பு தேர்வை நடத்துவதற்கு சிபிஎஸ்இ முன்மொழிந்த இரண்டு வடிவங்கள் குறித்த மாநிலங்களின் கருத்துக்கள் பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 23 அன்று நடந்த தேசிய ஆலோசனையில், 12 ஆம் வகுப்பு தேர்வை நடத்துவதற்கான இரண்டு விருப்பங்களை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கியது. விருப்பம் A இன் கீழ், 19 முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நியமிக்கப்பட்ட தேர்வு மையங்களில் “ஏற்கனவே இருக்கும் வடிவத்தில்” நடைபெறும், அதே நேரத்தில் சிறு பாடங்களுக்கான மதிப்பெண்கள் முக்கிய பாடங்களில் மாணவர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட வேண்டும்.
விருப்பத்தேர்வு B இன் கீழ், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நியமிக்கப்பட்ட மையங்களுக்கு பதிலாக மாணவர்களின் சொந்த பள்ளிகளில் நடத்தப்படும், மேலும் ஒவ்வொரு தேர்வும் 90 நிமிடங்களுக்கு என குறுகிய காலத்திற்கு இருக்கும்.
மே 27 அன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முதன்முதலில் அறிவித்தபடி, 32 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வை நடத்த ஆதரிக்கின்றன. இவற்றில், 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேர்வு குறைக்கப்பட்ட வடிவத்தில் (விருப்பம் B) நடத்துவதற்கு அல்லது இந்த விஷயத்தில் மத்திய அரசின் முடிவை ஆதரிக்க ஒப்புக் கொண்டன. டெல்லி, மகாராஷ்டிரா, கோவா, மற்றும் அந்தமான் & நிக்கோபார் ஆகிய நான்கு மாநிலங்கள் மட்டுமே எழுத்துத் தேர்வை திட்டவட்டமாக எதிர்த்தன.
இன்றைய கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் கலந்து கொண்டனர். கொரோனாவிற்கு பிந்தைய சிக்கல்களுக்காக செவ்வாய்க்கிழமை காலை புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டதால் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. உயர்கல்வி செயலாளர் அமித் கரே, பள்ளி கல்வி செயலாளர் அனிதா கார்வால், பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ரா மற்றும் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வை ரத்து செய்வதற்கான முடிவை மத்திய அரசு வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொற்றுநோய்களுக்கு மத்தியில் பன்னிரெண்டாம் வகுப்பு வாரியத் தேர்வுகளை நடத்தலாமா வேண்டாமா என்பது அடுத்த இரண்டு நாட்களில் முடிவு செய்யப்படும் என்று திங்களன்று மத்திய உச்ச நீதிமன்றத்தில் கூறி இருந்தது.
“அடுத்த இரண்டு நாட்களுக்குள் அரசாங்கம் இறுதி முடிவை எடுக்கும். வியாழக்கிழமை (ஜூன் 3) வரை உங்கள் பிரபுக்கள் எங்களுக்கு நேரம் கொடுப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், இதனால் நாங்கள் இறுதி முடிவோடு திரும்பி வர முடியும் ”என்று அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் நீதிபதிகள் ஏ எம் கான்வில்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வில் தெரிவித்திருந்தார்.
சொலிசிட்டர் ஜெனரலின் கோரிக்கையை அனுமதித்து, " அட்டர்னி ஜெனரல் கோரியபடி வியாழக்கிழமை இந்த விஷயத்தின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, மேலும் கொள்கை அடிப்படையில் ஒரு முடிவை எடுக்க வாய்ப்புள்ளது, இது நீதிமன்றத்தில் வைக்கப்படும்" என்பதை நீதிபதிகள் அனுமதித்தனர். கடந்த ஆண்டைப் போல் தேர்வு ரத்து என்ற கொள்கையிலிருந்து விலகத் தெரிவுசெய்தால் உறுதியான காரணங்களைக் கூறுமாறு நீதிமன்றம் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.