CBSE: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நாடு முழுக்க லாக்டவுன் நடைமுறையில் இருப்பதால், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல், பாதியில் ஒத்தி போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதில் ஜூலை 1-ம் தேதி முதல் 15ம் தேதி வரை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், விடுபட்ட தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
ஆனால், தேர்வு கால அட்டவணை அறிவிக்கப்படாத நிலையில், நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுளள்து.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு
காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும்
தேர்வர்கள் சானிடைசர்கள் கொண்டு வர அறிவுறுத்தபட்டுள்ளது.
மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.
முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும்.
தேர்வு அறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும்.
குழந்தைகள் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் கருத்தில் கொண்டு, அசாதாரண சூழ்நிலையின் ஒருமுறை நடவடிக்கையாக, 9 மற்றும் 11-ம் வகுப்பு ஆண்டு தேர்வுகளில் தோல்வியுற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி அடிப்படையில் மீண்டும் ஒரு தேர்வுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மாணவர்களின் தேர்வுகள் முடிவடைந்ததா, முடிவுகள் வெளியிடப்பட்டதா அல்லது அவர்களின் தேர்வுகள் முடிக்கப்படவில்லையா? என எதுவும் இதில் பொருட்படுத்தப்படாது.
இதற்காக பள்ளிகள் ஆன்லைன், ஆப்லைன் அல்லது புதுமையான சோதனைகளை நடத்தலாம். இந்த சோதனையின் அடிப்படையில் அடுத்த நிலையை தீர்மானிக்கலாம். மாணவர்கள் தோல்வியுற்ற அனைத்து பாடங்களிலும் இந்த சோதனை நடத்தப்படலாம். தேர்வை நடத்துவதற்கு முன், பள்ளிகள் மாணவர்களுக்கு போதுமான தயாரிப்பு நேரம் கொடுக்க வேண்டும்.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.