ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி) தகுதிச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை 7 ஆண்டுகளில் இருந்து வாழ்நாள் வரை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' வியாழக்கிழமை அறிவித்தார். இந்த நீட்டிப்பு 2011 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் நடந்த தேசிய ஆசிரியர் கல்வி வாரியத்தின் (என்.சி.டி.இ) 50 வது பொது குழுக் கூட்டத்தில், TET சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை 7 ஆண்டுகளில் இருந்து வாழ்நாள் வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், ஏற்கனவே 7 ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட தேர்வர்களுக்கு புதிய TET சான்றிதழ்களை மறு மதிப்பீடு செய்ய அல்லது புதிதாக வழங்க அந்தந்த மாநில அரசுகள் அல்லது யூனியன் பிரதேசங்கள் தேவையான நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் கூறினார். என்.சி.டி.இ.யின் பிப்ரவரி 11, 2011 தேதியிட்ட வழிகாட்டுதல்கள், மாநில அரசுகளால் TET தேர்வு நடத்தப்படும் என்றும், TET சான்றிதழின் செல்லுபடியாகும் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற தேதியிலிருந்து 7 ஆண்டுகள் ஆகும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆசிரியர் பணியில் வேலை செய்ய விரும்பும் தேர்வர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று அமைச்சர் போக்ரியால் கூறினார்.
இந்தியாவில் ஆரம்ப கல்வி ஆசிரியர் பணியில் வேலைவாய்ப்பை பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். தேசிய அளவிலான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி) சி.பி.எஸ்.இ.யால் நடத்தப்படுகிறது. தொடக்கப் பள்ளிகளில் கற்பித்தல் பதவிக்கு விண்ணப்பிக்கும்போது சி.டி.இ.டி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. TET தேர்வுகள் பெரும்பாலான மாநிலங்களில் மாநில அளவில் நடத்தப்படுகின்றன.
மாநிலங்களைப் பொறுத்தவரை, சில மாநிலங்கள் ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தியுள்ள நிலையில், உத்திரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் கொரோனா தொற்று குறைந்த பின் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil