/indian-express-tamil/media/media_files/2025/09/16/cbse-express-photo-by-kamleshwar-singh-1-2025-09-16-14-13-11.webp)
சி.பி.எஸ்.இ 2026: 2 பொதுத் தேர்வுகள் முதல் திறந்த புத்தகத் தேர்வுகள் வரை; அதிரடி மாற்றங்கள்!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பல்வேறு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்காலத் தேர்வுகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள உதவும் வகையில் உள்ளன. சி.பி.எஸ்.இ அறிவித்துள்ள முக்கிய மாற்றங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
2 பொதுத் தேர்வுகள்: 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். முதல் தேர்வு பிப்ரவரி 2026-இலும், 2-வது தேர்வு மே 2026-இலும் நடைபெறும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
75% வருகைப் பதிவு கட்டாயம்: 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுத, மாணவர்களுக்கு 75% வருகைப் பதிவு கட்டாயம் என ஆகஸ்ட் 4 அன்று சி.பி.எஸ்.இ மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
கூடுதல் பாடங்கள் நீக்கம்: 2026-ஆம் ஆண்டு முதல், தனித் தேர்வர்கள் (private candidates) கூடுதல் பாடங்களை (additional subjects) எடுப்பதற்கான வாய்ப்பை சி.பி.எஸ்.இ நீக்கியுள்ளது. தேர்வு எழுதுவது மட்டுமல்ல, பள்ளிக் கல்வி முழுமையாக இருப்பதும் அவசியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்: தேசிய அல்லது சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒலிம்பியாட்களில் பங்கேற்கும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சில சலுகைகள் உண்டு.
10-ம் வகுப்பு: இந்த மாணவர்கள் முதல் கட்ட (பிப்ரவரி) தேர்வில் கலந்துகொள்ள இயலாது. அவர்களுக்கு மே மாதம் நடைபெறும் 2-வது தேர்வில் மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும்.
12-ம் வகுப்பு: விளையாட்டுப் போட்டிகள் முக்கியத் தேர்வுகளுடன் நேருக்குநேர் மோதினால், அந்த மாணவர்களுக்குப் பிரதான தேர்வுச் சுழற்சி முடிந்த பிறகு மீண்டும் ஒருமுறை தேர்வு நடத்தப்படும்.
திறந்த புத்தகம் தேர்வு (Open-Book Assessment - OBA): 2026-27 கல்வி ஆண்டு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்குத் திறந்த புத்தகம் தேர்வு முறையை சி.பி.எஸ்.இ அறிமுகப்படுத்த உள்ளது. இதன்மூலம், மனப்பாடம் செய்வதைக் குறைத்து, புரிந்துகொண்டு படிக்கும் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம்: சி.பி.எஸ்.இ-ன் புதிய விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் அனைத்தும், வளாகத்தின் முக்கிய இடங்களில், ஆடியோ மற்றும் வீடியோ பதிவு செய்யும் வசதியுடன் கூடிய உயர் தர சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும்.
தாய்மொழி வழி கல்வி: மழலையர் பள்ளி முதல் 2-ம் வகுப்பு வரை தாய்மொழியிலோ அல்லது வட்டார மொழியிலோ கற்பிக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது. இதற்காக, மாணவர்களின் தாய்மொழியைப் பள்ளிகள் கணக்கெடுக்க வேண்டும்.
‘சர்க்கரை பலகைகள்’: பள்ளிகளில் சர்க்கரை பயன்பாட்டைக் குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘சர்க்கரை பலகைகள்’ (sugar boards) நிறுவ சி.பி.எஸ்.இ உத்தரவிட்டுள்ளது.
கல்விப் பாட்காஸ்டுகள்: மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உதவும் வகையில், கல்வி மற்றும் வழிகாட்டுதல் தொடர்பான டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் பாட்காஸ்டுகளை சி.பி.எஸ்.இ உருவாக்கி வருகிறது.
STEM பாடங்களில் இரு நிலைகள்: 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், சமூக அறிவியல் பாடங்களைப் போலவே, STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) பாடங்களிலும் 2 நிலைகளில் (basic & advanced) தேர்வுகள் நடத்த CBSE திட்டமிட்டுள்ளது. இது 2026-27 கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.